கேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்

தினகரன்  தினகரன்
கேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்

ஜெய்ப்பூர்: ‘‘குடியுரிமை திருத்த சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்துவதை தவிர வேறு வழியே இல்லை,’’ என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த முடியாது என கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் கூறி உள்ளன. இச்சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் சட்டப்பேரவைகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதோடு, கேரள அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பஞ்சாப் அரசும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு நேற்று வந்தார். அப்போது அவர் கூறியதாவது:சிஏஏ.வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால், அதை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. அரசியல் சட்டம் 254ன் கீழ் அது அமல்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், இது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விவகாரம். மாநில அரசின் சட்ட வரம்புக்கு உட்பட்டது அல்ல. மக்கள் தங்களின் கருத்தில் விடாப்பிடியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சட்டத்தின் எல்லையை தாண்டிச் செல்ல உரிமை இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வரம்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை