சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் செஸ் தொடங்கியது

தினகரன்  தினகரன்
சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் செஸ் தொடங்கியது

சென்னை: சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி  சென்னையில் நேற்று தொடங்கியது.தமிழ்நாடு சதுரங்க சங்கம், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும்  சர்வதேச அளவில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 12வது சென்னை ஓபன்  கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. முன்னாள் தேசிய செஸ் சாம்பியனும், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டருமான மானுவேல் ஆரோன் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகள் மொத்தம் 10 சுற்றுகளாக நடக்கிறது. மொத்தம் 145 மேசைகளில் வீரர்கள் விளையாடுகின்றனர்.இந்த தொடரில் 21 நாடுகளைச் சேர்ந்த  290 வீரர், வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.ரஷ்யாவில் இருந்து 6, வங்கதேசம், பெலாரஸ், பிரான்ஸ், சிங்கப்பூரில் இருந்து  தலா 3 பேர்,  அமெரிக்கா, உக்ரைன், ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 பேர்,  கனடா, சிலி, கொலம்பியா, இங்கிலாந்து, ஹங்கேரி, இந்தோனேசியா, இத்தாலி, பெரு, ஸ்லோவக்கியா, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்த தலா ஒருவரும், இந்தியாவில் இருந்து 253 பேரும் பங்கேற்றுள்ளனர். இவர்களில்  29பேர் கிராண்ட் மாஸ்டர்கள், 3 பேர் பெண் கிராண்ட் மாஸ்டர்கள், 23 சர்வதேச மாஸ்டர்கள், 7 பெண் மாஸ்டர்கள் என 65 பேர் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆவார்கள். சோழிங்கநல்லூர் தனியார் நட்சத்திர விடுதியில் நடக்கும் இந்தப் போட்டி  ஜன.25ம் தேதி வரை நடக்கும். முதலிடம் பிடிப்பவர்களுக்கு ₹3 லட்சம், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு ₹2லட்சம், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு ₹1.25லட்சம் என  மொத்தம் ₹15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை