மரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு

தினகரன்  தினகரன்
மரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு

இஸ்லாமாபாத்: முஷாரப்பின் மேல்முறையீடு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப், கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் அவசரநிலையை பிரகடப்படுத்தினார். அப்போது, 100க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக முஷாரப் மீது 2013ல் தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. எனினும், இதை லாகூர் உயர் நீதிமன்றம், ரத்து செய்தது.இந்நிலையில், தனக்கு எதிரான தேசத்துரோக வழக்கை எதிர்த்து முஷாரப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு கடந்த 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, முஷாரப் துபாயில்  தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற பதிவாளர், விசாரணைக்கு ஏற்க மறுத்து மனுவை திருப்பி அனுப்பி உள்ளார். அவர் தனது உத்தரவில், ‘சட்டப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் முதலில் சரணடைய வேண்டும். அதன் பின்தான் மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்க முடியும். எனவே, ஒரு மாதத்திற்குள் முஷாரப் சரணடைந்தால் மனு விசாரணைக்கு ஏற்கப்படும்’ என கூறியுள்ளார்.

மூலக்கதை