வீடுகள் வாங்க வாடிக்கையாளர்கள் தந்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம்: கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல்

தினகரன்  தினகரன்
வீடுகள் வாங்க வாடிக்கையாளர்கள் தந்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம்: கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் வீடுகள் கட்டும் 74 திட்டங்களை பிரபல கட்டுமான நிறுவனமான யுனிடெக் மேற்கொள்வதாக அறிவித்தது. இதற்காக வீடுகள் வாங்க முன்பதிவு செய்த 29,800 பேரிடம் மொத்தம் ரூ.14,270 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்களுக்காக 6 நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,805.86 கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களிலும் கணக்கு தணிக்கை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வீடுகள் வாங்க வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தில் ரூ.5,063 கோடி அல்லது 40 சதவீதம் பணம் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. மேலும் வெளிநாட்டிற்கு கொண்டு சென்ற ரூ.2,389 கோடி பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.இதேபோல், அரசு வங்கிகள் உள்பட நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடனில் ரூ.763 கோடி வீடுகள் கட்டும் திட்டங்களில் செலவிடப்படவில்லை. யுனிடெக் நிறுவனத்தின் 51 திட்டங்களை மட்டும் ஆய்வு செய்த ஆடிட்டர் மேற்கண்ட தகவலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் 23 திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.யுனிடெக் நிறுவனத்தின் குடியிருப்பு திட்டங்களில் வீடுகள் வாங்க ஏராளமானோர் பணம் கட்டியும் அவர்களுக்கு உரிய காலத்திற்குள் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் வீடு கட்டும் திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட்,, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அதன்படி பிரபல ஆடிட்டர் இந்த நிறுவனத்தின் திட்டங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதியின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வரி ஏற்ய்ப்பு செய்யப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டில் இந்த நிறு௸னத்தின் துணை நிறுவனங்களில் கடந்த 2007 முதல் 2010ம் ஆண்டு வரையில் மூன்று ஆண்டுகளில் ரூ.1,745.81 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-2018ம் ஆண்டுகளில் ரூ,1,406.33 கோடிதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.339 கோடி பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுளளதாக கணக்கு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.யுனிடெக் நிறுவனம் கணக்கு தணிக்கையின்போது, போதிய விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகவும் ஆடிட்டர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு்ள்ளார். யுனிடெக் நிறுவனம், வாடிக்கையாளர் மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கோடிக்கணக்கான பணத்தில் பகுதியை வெளிநாடுகளில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதோடு, வீடுகள் கட்டத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மூலக்கதை