சிஏஏ சட்டத்தை ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்ல சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: கேரள கல்வித்துறை நடவடிக்கை

தினகரன்  தினகரன்
சிஏஏ சட்டத்தை ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்ல சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: கேரள கல்வித்துறை நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்லும்படி கூறிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம், கொடுங்கல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  இந்தி ஆசிரியரை பற்றி மாணவி ஒருவரின் தந்தை, சமூக ஊடகங்களில் பரபரப்பு குற்றச்சாட்டை  கூறினார்.அதில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்று ஆசிரியர் கூறியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து  புள்ளி கல்வித் துறை துணை இயக்குனர், பள்ளிக்கு சென்று  விசாரணை நடத்தினார்.  அதில், 8ம் வகுப்புக்கு சென்ற அந்த ஆசிரியர், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க விரும்பவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தானுக்குதான் செல்ல வேண்டும்,’ என்று கூறியது உறுதியானது. இதையடுத்து, அந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.தலைமையாசிரியரின் அறிக்கையின்படி, வகுப்பில் பல மாணவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததாகவும், ஆசிரியரின் பேச்சால் அவர்கள் கோபமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த  ஆசிரியருக்கு எதிராக பல மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகாரும் அளித்திருந்தனர்.

மூலக்கதை