வளர்ச்சி பாதையில் தங்க கடன் சந்தை

தினமலர்  தினமலர்
வளர்ச்சி பாதையில் தங்க கடன் சந்தை

புதுடில்லி: நாட்டின் தங்கக் கடன் சந்தை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 4.62 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக வளர்ச்சி பெறும் என, கே.பி.எம்.ஜி., ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது

.இந்த ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த நிதியாண்டில், தங்கம் மீதான கடன் வழங்கும் நிறுவனங்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அதிக அளவுக்கு விரிவாக்கம் செய்துள்ளன.இந்நிலையில், தங்கக் கடன் சந்தை வளர்ச்சி விகிதம், 13.4 சதவீதமாக இருக்கும்.தங்கக் கடன் பிரிவில், ‘ஆன்லைன்’ மற்றும் ‘டிஜிட்டல்’ வசதிகளின் காரணமாக, வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல் தேடி வந்து, கடன் வழங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, தங்கக் கடன் சந்தையில், 35 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

தற்போதைய தங்கக் கடன் நிறுவனங்கள், அத்துறை சார்ந்த பிற நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும் பலத்த போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.ஒழுங்கமைக்கப்பட்ட தங்கக் கடன் துறையை விட, ஒழுங்கமைக்கப்படாத துறையின் அளவு, மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, தங்கக் கடன் வழங்கும் பெரிய நிறுவனங்கள், அடுத்த கட்டமாக, நுண் கடன் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட பிரிவுகளிலும் கால்பதித்து வருகின்றன.முன்னர், வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கும், வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவதற்கும்கூட, தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற வேண்டியதாக இருந்தது.

இப்போது இத்தகைய காரணங்களுக்காக, தங்கத்தை அடமானமாக வைக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.அண்மை காலத்தில், தங்கத்தின் விலை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மிக கவனத்துடன் தங்கக் கடன் வழங்க வேண்டியதிருக்கிறது. விலை ஓரளவு நிலை பெறும் வரை இந்த சிக்கல் உள்ளது.

மேலும், சர்வதேச அளவிலும் விலையில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதால், தங்கத்தின் மீது, நீண்ட கால கடன் வழங்குவதும் சிக்கலாகி இருக்கிறது.இதையடுத்து, தங்கத்தின் மதிப்பை விட மிகவும் குறைந்த அளவிலும், குறைந்த கால அவகாசத்திலும் கடன்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.தங்கத்தின் விலையில், ஏற்ற – இறக்கங்கள் பெரிய அளவில் அடிக்கடி ஏற்படுவதன் காரணமாக, நீண்ட கால கடன்கள் வழங்குவது சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை