சுங்க வரியை உயர்த்த ஆலோசனை

தினமலர்  தினமலர்
சுங்க வரியை உயர்த்த ஆலோசனை

புதுடில்லி: வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில், பொம்மைகள், குறிப்பிட்ட காகித வகைகள், காலணிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில், ’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும், பல பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிப்பது குறித்த பரிந்துரையை, நிதியமைச்சகத்துக்கு வழங்கி இருக்கிறது.

இவற்றில், மரச்சாமான்கள், ரசாயனம், ரப்பர், பேப்பர் போர்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.காலணி மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு, தற்போதைய, 25 சதவீதத்திலிருந்து, 35 சதவீதமாக சுங்க வரியை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. டயருக்கான சுங்க வரியை, 40 சதவீதமாக உயர்த்தவும் கோரிக்கை வைத்துள்ளது.

மரச்சாமன்களுக்கு தற்போதைய, 20 சதவீத வரியை, 30 சதவீதமாக அதிகரிக்கவும் ஆலோசனை தெரிவித்துள்ளது.மரம், உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றாலான பொம்மைகளுக்கு, தற்போதைய, 20 சதவீத சுங்க வரியை, 100 சதவீதம் வரை அதிகரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை