குற்றம் நடந்தபோது நான் மைனர் என்று கூறியதை ஐகோர்ட் நிராகரித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளி மனு

தினகரன்  தினகரன்
குற்றம் நடந்தபோது நான் மைனர் என்று கூறியதை ஐகோர்ட் நிராகரித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளி மனு

புதுடெல்லி: நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பவன் குமார் குப்தா, குற்றம் நடந்தபோது தான் மைனர் என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச் சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இது நாளை விசாரணைக்கு வருகிறது. டெல்லியை  சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல்  பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல், அவரை ஓடும் பஸ்சில் இருந்து கீழே  தள்ளியது. படுகாயம் அடைந்த அவர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி இறந்தார். இந்த பலாத்கார கொலை வழக்கில், தொடர்புடைய ஒரு குற்றவாளி  சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மைனர் குற்றவாளி தண்டனையை  நிறைவு செய்து விட்டான். மீதமுள்ள 4 குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங்  (32), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31), பவன் குப்தா (25)  ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி இவர்களின்  தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி டெல்லி நீதிமன்றம் கடந்த 7ம் தேதி  உத்தரவிட்டது.இந்நிலையில்,  குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பினார். அதை ஜனாதிபதி நேற்று முன்தினம் நிராகரித்தார். இவ்வாறு கருணை மனு நிராகரிக்கப்பட்டபின், 2 வாரம் இடைவேளை இருக்க வேண்டும் என்பதால், கொலை குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை பிப்.1ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், மற்றொரு குற்றவாளியான பவன் குப்தா, குற்றம் நடந்தபோது தான் மைனர் என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது. ‘சோனியா போன்று பெரிய மனது எங்களுக்கு இல்லை’மரண தண்டனைக்கு எதிரான கொள்கையுடையவர் பிரபல வக்கீல் இந்திரா ஜெய்சிங். இவர் டிவிட்டரில் வெளியிட்ட கருத்தில், ‘நிர்பயாவின் தாயின் வேதனையை முழுவதும் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அவர் சோனியா காந்தியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்டனையை சோனியா விரும்பவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ஆனால் மரண தண்டனையை எதிர்க்கிறோம்,’ என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பேட்டியளித்த நிர்பயாவின் தந்தை, ‘‘இது தவறான தகவல். இந்திரா ஜெய்சிங்கும் பெண்தான். இந்த கருத்துக்காக அவர் வெட்கப்பட வேண்டும். நிர்பயாவின் தாயிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த வழக்கில் நாங்கள் ஏழாண்டுகளாக போராடி வருகிறோம். நாங்கள் சாதாரண மக்கள். அரசியல்வாதிகள் அல்ல. சோனியா காந்தி அளவுக்கு எங்களுக்கு பெரிய மனது இல்லை. குற்றவாளிகளை மன்னிக்கும் மனநிலைதான், பலாத்காரங்கள் அதிகரிக்க காரணம். இந்த வழக்குக்கும், இந்திரா ஜெய்சிங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஏன் இதில் தலையிட்டு அவமானத்தை சந்திக்க வேண்டும்? ’’ என்றார். குற்ற வழக்குகளில் மன்னிப்பு கிடையாதுமூத்த வக்கீல்கள் ராகேஷ் திவேதி, விகாஸ் சிங் ஆகியோர் அளித்த பேட்டியில், ‘‘குற்ற வழக்குகளில், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது அல்லது மறுப்பது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. சட்டப்படிதான் நீதிமன்றம் செயல்படும். கிரிமினல் குற்றங்கள் எல்லாம் அரசுக்கு எதிரானதுதான்,’’ என்றனர்.

மூலக்கதை