சிஏஏ போராட்டங்களை ஒடுக்க அதிரடி? தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம்: ஆளுநர் உத்தரவு

தினகரன்  தினகரன்
சிஏஏ போராட்டங்களை ஒடுக்க அதிரடி? தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம்: ஆளுநர் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் எவரை வேண்டுமானாலும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கலாம். இந்தியர்களை மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரையும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இருக்கிறது.இந்நிலையில், இன்று முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை டெல்லி காவல் ஆணையருக்கு இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் அளிக்கப்படுவதாக டெல்லி துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிக்கை கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது.டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள குடிமக்கள் பதிவேடுக்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிகாரம் காவல் ஆணையருக்கு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது வழக்கமான ஒன்றுதான் என்றும் ஒவ்வொரு ஆண்டும் முதல் காலாண்டில் இதுபோன்று பிறப்பிக்கப்படுவது சகஜம் என்றும் டெல்லி போலீசார் கூறுகின்றனர்.

மூலக்கதை