காஷ்மீரில் மீண்டும் மொபைல் எஸ்எம்எஸ் சேவை

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் மீண்டும் மொபைல் எஸ்எம்எஸ் சேவை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 166 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மொபைல் போன் எஸ்எம்எஸ் சேவை அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலம் லடாக், ஜம்மு-காஷ்மீர் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரிய அளவில் வன்முறைகள் பரவின. இதை தடுப்பதற்காக இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. நிலைமையை பொருத்து அங்கு அவ்வப்போது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சேவை அளிக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டும் சேவை துண்டிக்கப்பட்டது.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் மொபைல் போன் சேவையை வழங்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் வேறு வழியின்றி, கடந்த 15ம் தேதி, 6 மாவட்டங்களில் உள்ள ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு இணையதள சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டது.இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் அனைத்து பகுதிகளிலும், தடை செய்யப்பட்ட எஸ்எம்எஸ் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.மேலும், ஜம்மு காஷ்மீரில் அனைத்து பிரிபெய்டு செல்போன் இணைப்புகளுக்கும் குரல் மற்றும் குறுஞ்செய்தி வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜம்முவின் 10 மாவட்டங்களிலும், காஷ்மீரின் குப்வாரா, பந்திப்போரா மாவட்டங்களிலும் 2ஜி இணையதள  சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை