திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு: பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்க நடவடிக்கை

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு: பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்க நடவடிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்குவதற்காக போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக திருமலையில் தேவஸ்தானம் சார்பில் ₹50 முதல் ₹6,500 வரை தினந்தோறும் வாடகைக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு திருமலையில் பணிபுரியக்கூடிய தேவஸ்தான அதிகாரிகள்,  போலீசார்,    போக்குவரத்து கழகம்,  சுற்றுலாத்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார துறை உள்ளிட்ட 44 துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்காக 652 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறைகளை விருந்தினர் மாளிகையாக மாற்றம் செய்துள்ளனர். இந்த அறைகளுக்கு தேவஸ்தானம் சார்பில் நாள்தோறும் ₹30 மட்டும் வாடகையாக பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவில் வரும்போது அறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறைகளை மீண்டும் திரும்ப பெறுவது தொடர்பாக கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறைகளை திரும்பப் பெறுவது என நோட்டீஸ் வழங்கப்பட்டது.  இந்நிலையில், கோயில் உயர் அதிகாரிகள் அறைகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க முன்வந்துள்ளனர். இதேபோன்று போலீசாருக்கு வழங்கப்பட்டதில் 8 அறைகளை தேவஸ்தானத்திற்கு ஒப்படைக்க முன்வந்துள்ளனர். மீதமுள்ள அறைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையில் தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை