கே.எஸ்.அழகிரி பேச்சு: சோனியா கூட்டம் திமுக புறக்கணிப்பு எதிரொலி ஸ்டாலினுடன் காங். தலைவர்கள் திடீர் சந்திப்பு : கூட்டணியில் விரிசல் இல்லை என்று அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கே.எஸ்.அழகிரி பேச்சு: சோனியா கூட்டம் திமுக புறக்கணிப்பு எதிரொலி ஸ்டாலினுடன் காங். தலைவர்கள் திடீர் சந்திப்பு : கூட்டணியில் விரிசல் இல்லை என்று அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பேச்சைக் கண்டித்து சோனியா கூட்டத்தை திமுக புறக்கணித்ததால் எழுந்த பரபரப்பான சூழ்நிலையில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர். கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் இணைந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தனர். இதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை, தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.   இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி இன்று காலை திடீரென சென்னை வந்தார்.

அவர், இன்று காலை 10. 45 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக கட்சி தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் மு. க. ஸ்டாலின மற்றும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் என் சார்பிலும் நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பிலும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பண பலம், அதிகார பலம், துஷ்பிரயோகம் அதுமட்டுமல்லாமல் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி பல இடங்களில் வெற்றி பெறுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்த சமயத்தில் திமுகவும், கூட்டணி கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று ஓரளவு அதை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இன்னும் பல இடங்களில் தலைவர்கள் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட அதை அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு அதிகார பலம், பண பலம் இருந்தும் அதையும் மீறி திமுக, காங்கிரஸ் கூட்டணி இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதற்கு மு. க. ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இ. யூ. முலீ கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து மிக சிறப்பாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட வெற்றியை பெற்றிருப்பது கூட்டணி கட்சி தலைவர் மு. க. ஸ்டாலினையே சாரும்.

அதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொண்டேன். நான் சென்னைக்கு வரும் சமயத்தில் எங்களது கூட்டணியில் திமுக இருந்த காலங்களில் எல்லாம், கலைஞரை சந்தித்து ஆசி பெறுவது உண்டு. அதேபோல ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பை ஏற்றபிறகு எங்களது கூட்டணி தலைவராக இருக்கும் காரணத்தால் மரியாதைநிமித்தம் அவரை சந்தித்து, அவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன்.

திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதை சரி செய்வதற்குதான் நீங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறதே?எங்கள் கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது. எங்களை பொறுத்தவரைக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியானது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலமாக இருக்கிறது.

இந்த கூட்டணியை யாராலும் ஏன் பத்திரிகையாளர்களாலும் பிரிக்க முடியாது. சில பத்திரிகையாளர்கள் இந்த கூட்டணியை பிரிக்க பல முயற்சி செய்கிறார்கள்.

அதுவும் பிரிக்க முடியாது. இந்த கூட்டணி வலுவான கூட்டணி.

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும். மரியாதைக்குரிய ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வருவார்.

அதற்கு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அயராது பாடுபடுவார்கள். விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் கூட்டணி குறித்து ஒரு கருத்து கூறி இருக்கிறாரே?கட்சியை பொறுத்தவரைக்கும் கருத்துக்கள் சொல்வதற்கு ஒரு சிலருக்கு சில கருத்துக்கள் இருக்கும். ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு கூட்டணியாக இருந்தாலும் சரி சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

அதை பேசி தீர்த்துக் கொள்வார்கள். இது சம்பந்தமாக, பத்திரிகையாளர்கள் சும்மா இருந்தாலே பிரச்னை தீர்ந்துவிடும்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும். கற்பனையாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.

வரும் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். கிராமங்களில், கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அங்கிருக்கும் சூழ்நிலைகள் சம்பந்தமாக நடைபெறும்.

அது எங்கள் கூட்டணியை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, கோபண்ணா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பகல் 12. 30 மணிக்கு சந்தித்துப் பேசினர்.

பின்னர் வெளியில் வந்த அழகிரி, கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் ஒற்றுமையுடன் உள்ளோம்.

எங்களுக்குள் மோதலை ஏற்படுத்த நினைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்றார்.

.

மூலக்கதை