நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு

தினமலர்  தினமலர்
நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு

தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்த சப்பாக் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆசிட் வீச்சை மையப்படுத்தி, நிஜ வாழ்க்கையைப் படமாக்கி எடுக்கப்பட்டிருந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளைப் பெற்றது. ஆசிட் பொருட்களை விற்பனை செய்ய, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தும், பெண்களுக்கு எதிரான ஆசிட் வீச்சு சம்பவங்கள், இந்தியாவில் குறையாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இத்தகைய பொருட்கள் தடையை மீறியும் மிக எளிதில் வாங்கக் கிடைக்கிறது என்பதை ரகசிய கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ மூலம் தீபிகா விளக்கியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஆசிட் வீச்சு, ஒருவருக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் விதமாக பாதிக்கப்பட்ட சிலர், தீபிகா பேசுவதைத் தொடர்ந்து, அந்த வீடியோவின் ஆரம்பத்தில் தோன்றுகிறார்கள். பின் கல்லூரி மாணவன், பிசினஸ் மேன், பிளம்பர், குடும்பப் பெண் என, வேடமணிந்த சிலர், ஆசிட்டை விற்பனை செய்யும் சில கடைகளுக்குச் செல்கின்றனர். அவர்களுள் ஒருவர், மது போதையில் இருக்கும் நபராகவும் வேடமணிந்துள்ளார். அவர்கள், கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்கும் போது, எந்த கேள்வியும் கேட்காமல், ஆசிட் விற்பனைச் செய்கின்றனர். ஒரே ஒரு கடைக்காரர் மட்டும், எதற்காக ஆசிட் வாங்குகிறாய்? உன் ஐ.டி., கார்டை காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார். மற்றக் கடைக்காரர் யாருமே, எந்த கேள்வியும் இல்லாமல், ஆசிட் விற்பனை செய்கின்றனர். இப்படி, ஒரு நாளில் மட்டும் 24 ஆசிட் பாட்டில்களை வாங்குகின்றனர். இவை அனைத்தையும், ரகசிய கேமராக்கள் மூலம் தீபிகாவும், அவரது குழுவினரும் படம் பிடித்துள்ளனர்.

இந்தப் பதிவுகளையெல்லாம் வீடியோவில் காட்சிகளாக ஓடவிட்டிருக்கும் நடிகை தீபிகா, இறுதியில், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இது போன்ற ஆசிட் விற்பனையைத் தடுக்க வேண்டும்; அப்போதுதான், ஆசிட்டை பெண்கள் முகத்தில் வீசும் கொடூர புத்தி கொண்ட ஆண்களுக்கு, எளிதில் ஆசிட் கிடைக்காமல் போகும் என, தன்னுடைய கருத்தையும், அந்த வீடியோவில் பதிவு செய்கிறார் தீபிகா. தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து, மும்பை சினிமா வட்டாரங்களில் கூறியதாவது:
சமூக பிரச்னைகளை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் எடுக்கப்படுகின்றன. அதில் நடிக்கும் நடிகர் - நடிகையர், அந்தப் படத்தில் பணம் வாங்கிக் கொண்டு நடிப்பதோடு சரி. அந்த சமூக பிரச்னை குறித்து ஒரு நாளும் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசிட் வீச்சை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் சப்பாக் படத்தில், மிகச் சிறப்பாக நடித்திருக்கும் நடிகை தீபிகா படுகோன், படம் ரிலீசான நிலையிலும், இனி ஆசிட் வீச்சு தொடரக் கூடாது என்பதற்காக, பல்வேறு விதங்களிலும் முயற்சி எடுத்து வருகிறார். அதில் ஒரு முயற்சிதான், ஆசிட் எங்கெல்லாம் எளிதாக கிடைக்கிறது என்பதற்கான வீடியோ பதிவு. இதைப் பார்த்தாவது, ஆசிட் விற்பனையை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றனர்.

தீபிகாவின் இந்த சமூக நோக்கத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை