70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை

தினகரன்  தினகரன்
70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை

பீஜிங்: சீனாவில் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் கடுமையாக குறைந்துள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் சீனாவில், தொடர்ந்து 3வது ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை அமல்படுத்திய சீன அரசு, 2016ம் ஆண்டு ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என விதிமுறையை தளர்த்தியது. இருப்பினும், குழந்தைகள் பிறப்பு சதவீதம் பெரிய அளவில் உயரவில்லை.கடந்த 2019ம் ஆண்டில், ஆயிரம் பேருக்கு 10.48 சதவீதம் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு. கடந்த ஆண்டில் 1.46 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949க்கு பிறகு, பிறப்பு விகிதம் இந்த அளவுக்கு சரிந்துள்ளது அரசுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ‘சீனர்களுக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளவதில் ஆர்வம் இல்லை. ஒரு குழந்தை திட்டமே அவர்களின் மனதில் பதிந்து விட்டது’ என்றும் தெரியவந்துள்ளது.\'பொருளாதாரம் கடும் வீழ்ச்சி\'சீன நாட்டு தேசிய புள்ளியியல் துறை, கடந்த ஆண்டுக்கான சீனாவின் ஜிடிபி விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த 2019ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவின் தேசிய புள்ளியியல் துறை ஆணையர் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மந்த நிலையில் உள்ளதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்,’’ என்றார். இருப்பினும், உலகின் 2வது பொருளாதார நாடாக கருதப்படும் சீனாவுக்கு, கடந்த 1990க்கு பிறகு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக இது கருதப்படுகிறது.  2018ம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. சீன பொருளாதாரம் தொடர்பான கணிப்பை வெளியிட்ட ஏஎப்பி நிறுவனம், பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என தெரிவித்திருந்தது. பொருளாதாரத்தில் வல்லரசு நாடுகளாக திகழும் அமெரிக்கா-சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நிலவி வந்தது. இதனால், சீனாவின் வர்த்தகம் ஸ்தம்பித்தது. இதுவே, சீனாவின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மூலக்கதை