சர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா

தினகரன்  தினகரன்
சர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா

வாஷிங்டன்: சர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன், பாகிஸ்தான் அரசு திருட்டுத்தனமாக அணு ஆயுதங்களையும், அதன் தொழில்நுட்பங்களையும் வாங்கி குவிப்பதாக அமெரிக்கா ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளது. பாகிஸ்தான் கடந்த 1980ம் ஆண்டு அணு குண்டு தயாரித்தது.  இதற்காக பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் கதீர் கான், ‘யுரன்கோ’ என்ற நெதர்லாந்து நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப வடிவமைப்புகளை திருடினார் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அணு ஆயுத தொழில் நுட்பங்களை லிபியா, ஈரானுக்கு வழங்கி பாகிஸ்தான் உதவியது. சீனாவின் உதவியுடன் வடகொரியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை விற்றது. இதனால், பாகிஸ்தான் மீது 16 ஆண்டுகளுக்கு முன்பே திருட்டு, கடத்தல், அணு ஆயுத பரவல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இந்நிலையில், அணு ஆயுத கடத்தல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் மீண்டும் சிக்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது கம்ரன் வாலி (41), கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியர் முகமது ஆசன் வாலி (48), ஹாஜி வாஜி முகமது ஷேக் (82), ஹாங்காங்கில் வசிக்கும் பாகிஸ்தானியர் அஷ்ரப் கான் முகமது, இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானியர் அகமது வாஹித் (52) ஆகியோர் அமெரிக்க ஆயுத தொழில்நுட்பத்தை பாகிஸ்தானின் அணு சக்தி ஆணையத்துக்கு சட்ட விரோதமாக கடத்தியதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.இந்த 5 பேரும் சர்வதேச கொள்முதல் நிறுவனங்களை, பெரிய கூட்டமைப்பு போல் செயல்படுத்தி உள்ளனர். அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களை இவர்கள் கொள்முதல் செய்து, பாகிஸ்தானில் உள்ள மேம்படுத்தப்பட்ட பொறியியல் ஆராய்ச்சி அமைப்பு (ஏரோ), பாகிஸ்தான் அணுசக்தி ஆணையம் (பிஏஇசி) ஆகியவற்றுக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்துள்ளனர். ஏவுகணை, டிரோன் மற்றும் அணு ஆயுத திட்டங்களுக்கான பொருட்களை அமெரிக்காவில் இருந்து இடைத்தரகர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் மூலமாக இந்த 5 பேரும் கொள்முதல் செய்து, ஏற்றுமதி உரிமம் பெறாமலேயே பாகிஸ்தான் அனுப்பி உள்ளனர். இது, அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுபாடு சீர்திருத்த சட்ட விதிமுறைகளுக்கும், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்துக்கும் எதிரானது என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கான துணை அட்டர்னி ஜெனரல் ஜான் சி டெமர்ஸ் கூறியுள்ளார். ‘இந்தியாவிடம் மண்டியிட மாட்டோம்’அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள சர்வதேச படிப்புகள் மற்றும் யுக்திகள் மையத்தில் (சிஎஸ்ஐஎஸ்), பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘காஷ்மீர் பிரச்னையை தீர்க்கும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட வேண்டும். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட பாகிஸ்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் அரசு அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புகிறது. அதற்காக, இந்தியாவுடன் எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாரில்லை. அதனிடம் மண்டியிடவும் மாட்டோம். எங்கள் கவுரவத்தை நிச்சயம் விட்டுக் கொடுக்க மாட்டோம். காஷ்மீர் பிரச்னையை தீர்க்காமல் இந்தியாவுடன் அமைதிக்கு நாங்கள் தயாரில்லை,’’ என்றார்.250 அணு ஆயுத இலக்கு*  பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றதில் இருந்தே, அந்நாட்டு வெளியுறவு, பாதுகாப்பு கொள்கைகளை ராணுவம்தான் தீர்மானிக்கிறது.* இந்தியாவிடம் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வரை உள்ளன. * 2025ம் ஆண்டுக்குள் தனது அணு ஆயுத எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.* ஏற்கனவே, சீனா மற்றும் வடகொரியாவின் உதவியோடு பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது.

மூலக்கதை