காஷ்மீரில் சிக்கியவர் தீவிரவாதி டிஎஸ்பி வழக்கை என்ஐஏ மோடியிடம் தரலாம்: ராகுல் கடும் தாக்கு

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் சிக்கியவர் தீவிரவாதி டிஎஸ்பி வழக்கை என்ஐஏ மோடியிடம் தரலாம்: ராகுல் கடும் தாக்கு

புதுடெல்லி: ‘தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் டிஎஸ்பி தவிந்தர் சிங் மீதான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு தலைவர் ஒய்.சி மோடியிடம் ஒப்படைத்தால், அது அப்படியே கிடப்பில் போடப்படும்,’ என ராகுல்  காந்தி தாக்கியுள்ளார்.  தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவராக இருப்பவர் ஒய்.சி.மோடி. இதற்கு முன் அவர், குஜராத் கலவர வழக்கு, ஹரேன் பாண்ட்யா படுகொலை வழக்குகளை விசாரித்துள்ளார். இந்த வழக்குகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. இதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, தனது டிவிட்டர் பதிவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தீவிரவாதி டிஎஸ்பி தவிந்தரை அமைதிப்படுத்த சிறந்த வழி, அவர் மீதான வழக்கை என்ஐஏ தலைவரிடம் ஒப்படைப்பதுதான். அந்த அமைப்புக்கு ‘இன்னொரு மோடி’ தலைமை வகிக்கிறார். இவருடைய கண்காணிப்பில் தவிர்ந்தர் சிங் வழக்கும் அப்படியே கிடப்பில் போடப்படும்,’ என குறிப்பிட்டுள்ளார்.‘10 வரி பேச முடியுமா?’டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜ செயல் தலைவர் நட்டா பேசுகையில், ‘`குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டை  ராகுல் காந்தி தவறாக வழி நடத்துகிறார். அவருக்கு இந்த சட்டத்தை புரிந்து கொள்ளும் திறன் இல்லை. இச்சட்டம் பற்றி தொடர்ந்து அவரால் பத்து வரிகள் பேச முடியுமா? குடியுரிமை திருத்த சட்டம் என்பது, அண்டை நாடுகளில் பல ஆண்டுகளாக மத  துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மை மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அவர்கள் அடைக்கலம் பெற வழி கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக இருந்த இப்பிரச்னையை ஆறே மாதத்தில் தீர்த்தவர் மோடி,’’ என்றார்.

மூலக்கதை