வெளிநாடு செல்வதற்கு செலுத்தப்பட்ட 20 கோடி பிணைத் தொகையை கார்த்தியிடம் திருப்பித் தர உத்தரவு

தினகரன்  தினகரன்
வெளிநாடு செல்வதற்கு செலுத்தப்பட்ட 20 கோடி பிணைத் தொகையை கார்த்தியிடம் திருப்பித் தர உத்தரவு

புதுடெல்லி: வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.20 கோடி பிணைத் தொகையை அவரிடம் திருப்பித் தரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீதான மலேசியா மேக்சிஸ் நிறுவனம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதற்கு முன்பாக, கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது, இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘நான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனு தாக்கல் செய்தேன். அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.20 கோடி பிணைத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி, வெளிநாடு சென்று  வந்தேன்.  அதன் பிறகும், அந்த பணத்தை எனக்கு மீண்டும் திருப்பி தரவில்லை. எனவே, நான் செலுத்திய ரூ.20 கோடியை திரும்ப வழங்கும்படி உத்தரவிட வேண்டும்,’ என கூறியிருந்தார். இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, ‘வெளிநாடு செல்வதற்காக கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.20 கோடி பிணைத் தொகையை அவரிடம் திருப்பித்தர வேண்டும்,’ என நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த தொகை விரைவில் கார்த்திக்கு கிடைக்க உள்ளது.

மூலக்கதை