தவான், கோஹ்லி, ராகுல் அதிரடி: ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
தவான், கோஹ்லி, ராகுல் அதிரடி: ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி | ஜனவரி 17, 2020

ராஜ்கோட்: ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தவான், கோஹ்லி, லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்து மிரட்டினர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வீழ்ந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த ரிஷாப் பன்டுக்குப் பதில் மணிஷ் பாண்டே இடம் பெற்றார். ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார். 

தவான் அபாரம்

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது ரோகித் சர்மா (42) அவுட்டானார். தவான் ஒருநாள் அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். பின் ‘வேகம்’ எடுத்த தவான், ஏகார் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார்.

கோஹ்லி அரைசதம்

ரிச்சர்ட்ன் பந்தில் அவுட்டான தவான் (96) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் (7) மீண்டும் ஏமாற்றினார். 56 வது அரைசதம் அடித்த கோஹ்லி, 78 ரன் எடுத்த போது, சிக்சருக்கு ஆசைப்பட்டு ஜாம்பா ‘சுழலில்’ சரிந்தார். மணிஷ் பாண்டே (2) ஏமாற்றினார்.

ராகுல் ‘வேகம்’

 கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய லோகேஷ் ராகுல் அதிவிரைவாக ரன் சேர்த்தார். இவரது ‘ஷாட்’ ஒவ்வொன்றும் ‘இடி’ போல இருந்தது. 38வது பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு தந்தார். ராகுல், 80 ரன்னுக்கு ரன் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்தது.

ஸ்மித் ‘98’

கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. வார்னர் (15), மணிஷ் பாண்டேயின் ‘சூப்பரான’ ஒற்றைக் கை ‘கேட்சில்’ திரும்பினார். பின்ச் (33), சர்ச்சைக்குரிய முறையில் ‘ஸ்டம்டு’ ஆனார். ஸ்மித் 24வது அரைசதம் அடிக்க, லபுசேன் 46 ரன்னுக்கு கிளம்பினார்.

குல்தீப் திருப்பம்

தனது 9வது ஓவரை வீசிய குல்தீப் திருப்பம் தந்தார். 2வது பந்தில் கேரியை (18) அவுட்டாக்கிய இவர், 5வது பந்தில் அபாயகரமான ஸ்மித்தை (98) போல்டாக்க, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 44வது ஓவரை வீசிய ஷமி, டர்னர் (13), கம்மின்சை (0) அடுத்தடுத்த பந்துகளில் போல்டாக்கினார். சைனியின் 10வது ஓவரில் ஏகார் (25), ஸ்டார்க் (6) கிளம்பினர். ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 36 ரன்னில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடர் 1–1 என சமனில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வரும் 19ல் நடக்கிறது. 

 

மூலக்கதை