தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது ஆப்கன்: ஜூனியர் உலக கோப்பையில் அதிர்ச்சி | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது ஆப்கன்: ஜூனியர் உலக கோப்பையில் அதிர்ச்சி | ஜனவரி 17, 2020

கிம்பெர்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. கிம்பெர்லியில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று ‘பேட்டிங்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ஜோனாதன் பேர்டு (0), ஆன்ட்ரூ லுாவ் (2) ஏமாற்றினர். கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் (40), லுாக் பியூபோர்ட் (25) ஆறுதல் தந்தனர். ஷபிகுல்லா கபாரி ‘சுழலில்’ லெவர்ட் மஞ்ச் (0), ஜாக் லீஸ் (0), கன்யா கோடானி (8), டியான் வான் வூரென் (5) உள்ளிட்டோர் சிக்கினர்.

தென் ஆப்ரிக்க அணி 29.1 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டது. ஷபிகுல்லா கபாரி 6 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் பர்ஹான் ஜாகில் (11) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய இப்ராஹிம் ஜத்ரன் (52), இம்ரான் (57) அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டனர். ஆப்கானிஸ்தான் அணி 25 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மானுல்லா (3), அபித் முகமதி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதன்முறை

அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் போட்டி (19 வயது) வரலாற்றில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை மோதிய 4 போட்டியில், தென் ஆப்ரிக்கா 3, ஆப்கானிஸ்தான் 1ல் வென்றன.

மூலக்கதை