இந்தியா ‘ஏ’ அணி வெற்றி | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
இந்தியா ‘ஏ’ அணி வெற்றி | ஜனவரி 17, 2020

லிங்கன்: நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அசத்திய இந்தியா ‘ஏ’ அணி 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி அதிகாரப்பூர்வமற்ற 3 ஒருநாள் (ஜன. 22, 24, 26), 2 டெஸ்ட் (ஜன. 30–பிப். 2, பிப். 7–10) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்தியா ‘ஏ’ அணி, நியூசிலாந்து லெவன் அணியுடன் 2 பயிற்சி ஆட்டத்தில் (50 ஓவர்) விளையாடுகிறது. முதல் பயிற்சி போட்டி லிங்கன் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து லெவன் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்தியா ‘ஏ’ அணிக்கு மயங்க் அகர்வால் (8) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய கேப்டன் சுப்மன் கில் (50), சூர்யகுமார் யாதவ் (50), ருதுராஜ் கெய்க்வாத் (93) கைகொடுத்தனர். சஞ்சு சாம்சன் (4), விஜய் சங்கர் (13), அக்சர் படேல் (5) நிலைக்கவில்லை. குர்னால் பாண்ட்யா (41) ஓரளவு ரன் சேர்த்தார்.

இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து லெவன் அணி 41.1 ஓவரில் 187 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஜாகோப் புலா (50), ஜாக் பாயில் (42), டேன் கிளீவர் (33) ஆறுதல் தந்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் கலீல் அகமது 4, முகமது சிராஜ், குர்னால் பாண்ட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இரண்டாவது பயிற்சி போட்டி நாளை நடக்கிறது.

மூலக்கதை