கோஹ்லி அபாரம் | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லி அபாரம் | ஜனவரி 17, 2020

ராஜ்கோட்டில் 78 ரன்கள் எடுத்த கோஹ்லி, சர்வதேச அரங்கில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆலன் பார்டரை (11,062 ரன், ஆஸி.,) முந்தி, ஐந்தாவது இடம் பெற்றார். இவர், 171 போட்டியில் 11,119 ரன்கள் எடுத்துள்ளார். முதல் நான்கு இடத்தில் பாண்டிங் (15,440, ஆஸி.,), கிரீம் ஸ்மித் (14,878, தெ.ஆப்.,), பிளமிங் (11,561, நியூசி.,), தோனி (11,207, இந்தியா) உள்ளனர்.

3,000

கோஹ்லி, தவான் இணைந்து ஒருநாள் அரங்கில் 3000 ரன்கள் எடுத்த 40வது ஜோடி ஆனது. இந்திய அளவில் இந்த இலக்கை எட்டிய 10வது ஜோடி ஆனது. 

* ஒட்டுமொத்த அளவில் சிறந்த சராசரி கொண்ட ஜோடியில் ஆம்லா–டிவிலியர்ஸ் (72.34, தெ.ஆப்.,), ரோகித்–கோஹ்லிக்கு (64.06) அடுத்து மூன்றாவது இடம் கோஹ்லி–தவானுக்கு (62.50) கிடைத்தது.

தவான், ரோகித் காயம்

கம்மின்ஸ் வீசிய பந்து (9.2வது ஓவர்) சற்று உயரமாக சென்றது. இது, தவானின் வலது பக்க விலா எலும்பில் பலமாக தாக்கியது. உடனடியாக தவான் கீழே சரிந்தார். ‘பிசியோதெரபிஸ்ட்’ சிகிச்சைக்குப் பின் சகஜ நிலைமைக்கு திரும்பிய தவான், 96 ரன் எடுத்து அவுட்டானார். இந்தியா பவுலிங் செய்த போது இவருக்குப் பதில் சகால் பீல்டிங் செய்தார்.

* நவ்தீப் சைனி வீசிய 42.2 வது ஓவரில் ஏகார் அடித்த பந்து பவுண்டரி எல்லைக்கு சென்றது. இதை தடுக்க முயன்ற ரோகித் சர்மா, இடது தோள் பகுதியில் காயம் அடைந்தார். வலியால் துடித்த இவருக்குப் பதில் கேதர் ஜாதவ் பீல்டிங் செய்தார்.

113

ஒருநாள் அரங்கில் இந்தியா 113 வது முறையாக 300 ரன்னுக்கும் மேல் சேர்த்தது. ஆஸ்திரேலியா (107), தென் ஆப்ரிக்கா (84), பாகிஸ்தான் (81), இங்கிலாந்து (78) அடுத்த இடங்களில் உள்ளன.

1000

லோகேஷ் ராகுல் 64 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ரன்கள்(27 இன்னிங்ஸ்) எடுத்தார். கோஹ்லி (24), தவான் (24), சித்துவுக்கு (25) அடுத்து அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஆனார். 

78

ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது மோசமான பவுலிங்கை பதிவு செய்தார் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க். 10 ஓவரில் 78 ரன்கள் கொடுத்தார். இதற்கு முன் 2015ல் இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்கள் விட்டுத் தந்தார்.

அம்பயர்கள் சாதகமா

இந்திய அணி பேட்டிங்கின் போது ஜடேஜா ஆடுகளத்தில் ஓடியதாக 44.4, 46.2 வது ஓவரின் போதும் அம்பயர் எச்சரித்தார். இருமுறை தவறு செய்ததால் இந்தியாவுக்கு அபராதமாக 5 ரன் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தரப்படவில்லை.

* ஜடேஜா பந்தில் பின்ச் ‘அவுட்’ சந்தேகமாக இருந்த நிலையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தர வேண்டும் என்ற விதியை மீறி, பவுலருக்கு சாதகமாக தீர்ப்பு தரப்பட்டது.

* லபுசேன் அடித்த பந்து பின்புறமாக சென்ற நிலையில், ரோகித் சர்மா பந்தை எறிவது போல பாசாங்கு செய்தார். இதையும் அம்பயர்கள் கண்டு கொள்ளவில்லை. 

பின்ச் அவுட் சரியா

ஜடேஜா பந்தில் (15.1வது ஓவர்) பின்ச்சை ‘ஸ்டம்டு’ செய்தார் லோகேஷ் ராகுல். நீண்டநேரம் ‘ரீப்ளே’ பார்த்த மூன்றாவது அம்பயர் மைக்கேல் கப் (இங்கிலாந்து), அவுட் தந்தார். விதிப்படி இரண்டு ‘பைல்சும்’ ஸ்டம்சை விட்டு பிரிந்திருக்க வேண்டும். ஆனால், ‘பைல்ஸ்’ பிரியாத நிலையில், ஸ்டம்சில் எரிந்த ‘எல்.இ.டி.,’ வெளிச்சத்தை வைத்து அவுட் ஆனதாக அறிவித்து தவறு செய்தார்.

100

நேற்று கேரியை வெளியேற்றிய குல்தீப், ஒருநாள் அரங்கில் தனது 100 வது விக்கெட்டை வீழ்த்தினார். 

* அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முகமது ஷமி (56 போட்டி), பும்ராவுக்கு (57) அடுத்த இடம் பெற்றார் குல்தீப் (58). 

* இந்த இலக்கை எட்டிய 22வது இந்திய பவுலர் ஆனார்.

* குறைந்த ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர்களில் ரஷித் கான் (44, ஆப்கன்), சாக்லைன் முஸ்தாக்கிற்கு (53, பாக்.,) அடுத்த இடத்தை இம்ரான் தாகிருடன் ( 58, தெ.ஆப்.,) பகிர்ந்து கொண்டார் குல்தீப் (58). 

அடுத்து பெங்களூரு...

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இங்கு இந்தியா விளையாடிய 20 போட்டிகளில் 13ல் வென்றது. ஒரு போட்டி ‘டை’ ஆக, ஒரு போட்டி ரத்தானது. 5ல் மட்டும் தோற்றது. இதனால் மூன்றாவது போட்டியில் சாதித்து இந்தியா கோப்பை வெல்லும் என நம்பப்படுகிறது. 

மூலக்கதை