10 லட்சம் வேலைவாய்ப்புகள் அமேசானின் அடுத்த அறிவிப்பு

தினமலர்  தினமலர்
10 லட்சம் வேலைவாய்ப்புகள் அமேசானின் அடுத்த அறிவிப்பு

புதுடில்லி: உலகின் மிகப் பெரிய, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனமான, ‘அமேசான்’ அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில், 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம், பெரிதாக எந்த சகாயமும் செய்து விடவில்லை என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.திறன் மேம்பாடுஇந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜெப் பெசோஸ், 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஜெப் பெசோஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில், 10 லட்சம் வேலைவாய்ப்புகளை, அமேசான் உருவாக்க இருக்கிறது. இது, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கருத்துருவாக்கம், சில்லரை விற்பனை, சரக்கு போக்குவரத்து, உற்பத்தி என, பல துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.இவை தவிர, கடந்த ஆறு ஆண்டுகளில், அமேசான் நிறுவனம், தன் முதலீடுகள் மூலம், இந்தியாவில், ஏழு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.7,100 கோடிசில நாட்களுக்கு முன், இந்தியாவில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை, ‘டிஜிட்டல்’மயமாக்குவதற்காக, 7,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, அமைச்சர் பியுஷ் கோயல், அமேசான் முதலீடுகள் மூலம், நாட்டுக்கு எந்த சகாயமும் செய்து விடவில்லை என தெரிவித்திருந்தார்.

மூலக்கதை