டெல்லியில் தலைமை செயலாளர்கள் கூட்டம் மக்கள் தொகை பதிவேடு மத்திய அரசு ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் தலைமை செயலாளர்கள் கூட்டம் மக்கள் தொகை பதிவேடு மத்திய அரசு ஆலோசனை

* எதிர்கட்சி ஆளும் மாநில அதிகாரிகள் புறக்கணிப்பு?
* கேரளாவை போன்று பஞ்சாபில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்

புதுடெல்லி: டெல்லியில் இன்று மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், எதிர்கட்சிகள் ஆளும் மாநில  தலைமை செயலாளர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா, தங்கள்  மாநில அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே கேரளாவை போன்று, பஞ்சாப் சட்டப்பேரவையில் இன்று சிஏஏ  எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பெரும் அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

நாடு  முழுவதும் வருகிற ஏப். 1ம் தேதியிலிருந்து செப். 30ம் தேதி வரை தேசிய மக்கள் தொகையின் பதிவேடு (என்பிஆர் - மக்கள் தொகை கணக்கெடுப்பு)  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகளை மேற்கொள்வது குறித்து மத்திய உள்துறை இணை  அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலர், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்கள் கலந்து  கொண்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான திட்டப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை, தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும்  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘தங்களது மாநில அரசின் சார்பில் யாரும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்’ என்று அறிவித்துள்ளார்.   அதேபோல், கேரள மாநில முதன்மை செயலாளர் (பொது நிர்வாகம்) கே. ஆர். ஜோதிலால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேற்று ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில், ‘கேரளத்தில் அனைத்து என்பிஆர் உடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசாங்கம் நிறுத்தியுள்ளது. முதல்கட்ட  மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2021ல் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

ஆனால், என்பிஆர் குறித்த சந்தேகங்கள் மற்றும் வேறு தகவல்களுடன்  இணைத்தல் குறித்த பிரச்னைகள் இருப்பதால் அதனை செயல்படுத்தவில்லை. சில இடங்களில் என்பிஆர் கணக்கெடுப்பு ெதாடர்பாக  ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிகழாமல்  இருப்பதை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை மீறி தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் தலைமை செயலாளர்களில் பலர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மாற்றாக அடுத்த நிலையில்  உள்ள அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், சில மாநில அதிகாரிகள் கூட்டத்தை புறக்கணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இக்கூட்டம் குறித்து மத்திய உள்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இம்முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையானது. வெறுமனே வழக்கமான குடியிருப்பு விவரங்களை சேகரிக்க கூடியது அல்ல.   முக்கிய தரவுத்தளமாக உருவாக்கும் வகையில் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைக் கொண்டிருக்கும்.

ஏற்கனவே பெரும்பாலான  மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதாவது, கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம் அடிப்படையில்  கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணப்படுத்தப்படுகிறது. தேசிய அடையாள அட்டைகளின் விதிகள் - 2003ன் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

2015ம் ஆண்டில் வீடுதோறும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு  அடிப்படையில், தற்போது என்பிஆர் தரவு மேலும் புதுப்பிக்கப்படும். 2015ம் ஆண்டில் பதிவேட்டைப் புதுப்பிப்பதின் அடிப்படையில், ​​ஆதார் மற்றும்  மொபைல் எண்கள் தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

தொடர்ந்து ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற சில  கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்படலாம். இருப்பினும், செயல்பாட்டின் போது வருமான வரி நிரந்தர கணக்கு அட்ைடயாள பான் கார்டு குறித்த  எந்த விவரமும் கேட்கப்படாது.

ஒரு குடியிருப்பாளரின் பெயர், தந்தை மற்றும் தாயின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வீட்டுத் தலைவருடனான உறவு, திருமணமானவரா,  இல்லையா, தேதி மற்றும் பிறந்த இடம், நிரந்தர முகவரி, தங்கியிருக்கும் காலம், கல்வி போன்ற விவரங்களை என்பிஆர் சேகரிக்கும்.

தகுதி  மற்றும் தொழில்முறை விவரங்களும் சேகரிக்கப்படும். இப்பணிகளுக்காக மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.

கணக்கெடுப்பு  பணிக்காக மத்திய அமைச்சரவை ரூ. 3,941. 35 கோடியை ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, குடியுரிமை (திருத்த) சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரள சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன், அம்மாநில முதல்வர்  பினராய் விஜயன் தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார். கேரளாவை போன்று காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் இரண்டாவது  மாநிலமாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

மேலும், என்பிஆர் மற்றும் என்ஆர்சி தொடர்பான  வடிவத்தில் திருத்தம் செய்ய பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான சட்டீஸ்கரில்,  என்பிஆர் கணக்கெடுப்பு குறித்த 2019 அக்டோபரில் வெளியிட்ட உத்தரவை திருத்தி அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை