டெல்லி அரசு, மத்திய உள்துறை நிராகரித்ததை தொடர்ந்து கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு: நிர்பயா குற்றவாளியின் கடைசி முயற்சி நிறைவேறுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி அரசு, மத்திய உள்துறை நிராகரித்ததை தொடர்ந்து கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு: நிர்பயா குற்றவாளியின் கடைசி முயற்சி நிறைவேறுமா?

புதுடெல்லி: டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியன நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த நிலையில், அம்மனு ஜனாதிபதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால், நிர்பயா குற்றவாளியின் கடைசி முயற்சி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த நிர்பயா பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, ஆகாஷ் குமார் சிங், பவன் குப்தா  ஆகிய நான்கு பேரை, ஜன. 22ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது.

குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்,  தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனுவை டெல்லி  துணைநிலை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.

மேலும், முகேஷ் சிங்கின் கருணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாதென டெல்லி மாநில  அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

இருந்தபோதும், நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க அறிவிக்காத நிலையில், இந்த  வழக்கின் குற்றவாளிகளை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தூக்கிலிடுவதற்கு, இடைக்கால தடைவிதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி கூறும்போது, “நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் உள்ளதால்,  நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுபடி, ஜன. 22ம் தேதி தங்களால் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று திஹார் சிறை  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருந்தும், தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுக்களை நீதிமன்றம்  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.

இதேபோன்று, நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியை ஒத்திவைக்கும்படி, டெல்லி மாநில  அரசையும் திஹார் சிறை நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

கருணை மனு நிலுவையில் உள்ளதால், தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான  புதிய தேதியை அறிவிக்கும்படியும் டெல்லி அரசை திஹார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில், மத்திய உள்துறை  அமைச்சகத்தின் பரிந்துரைப்படி தான், நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுமீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவெடுப்பார்  என்று தெரிகிறது.

இதனால், இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கான தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில்  காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, தூக்கு தண்டனை குற்றவாளிகள் 4 பேரும், திஹார் சிறை எண்: 3க்கு  மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரித்து டெல்லி அரசு புதன்கிழமை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாக துணை  முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு  திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை