அடங்காத காளைகள்; அடக்கப் பாய்ந்த காளையர்கள் அலங்காநல்லூரில் சும்மா கிழி.. கிழி.. கிழி..

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடங்காத காளைகள்; அடக்கப் பாய்ந்த காளையர்கள் அலங்காநல்லூரில் சும்மா கிழி.. கிழி.. கிழி..

அலங்காநல்லூ: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடந்தது. இதில் 700 காளைகள் களமிறக்கப்பட்டன.

836 காளையர்கள்  சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க போட்டிப் போட்டனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, ஜன. 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடந்தது. தொடர்ந்து மதுரை  அருகே உள்ள பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 641 காளைகள் இறக்கப்பட்டன. 6. 7 மாடுபிடி வீரர்கள்  காளைகளுடன் ‘கபடி‘ ஆடினர்.

காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 71 பேர் காயமடைந்தனர். பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 675 காளைகள் சீறிப்பாய்ந்தன. ஒரு மணி நேரத்திற்கு 75 பேர் வீதம் 936 வீரர்கள் காளைகளுடன்  மோதினர்.

இங்கு காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7. 40 மணியளவில் கோட்டை முனியசாமி கோயில் திடலில்  துவங்கியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில், மதுரை கலெக்டர் வினய் தலைமையில், அமைச்சர் உதயகுமார்  முன்னிலையில் 836 மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காலை 6 மணி முதலே டோக்கன் எண் வரிசையில் வாடிவாசல் பின்புறம் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காளைகளுக்கு பரிசோதனை  நடந்தது.

கால்நடை வட்டார மருத்துவர் ராஜா மற்றும் குழுவினர் காளைகளை பரிசோதித்து தகுதி சான்று வழங்கினர். அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீரர்களுக்கான உடல் தகுதி பரிசோதனை நடந்தது. உயரம், எடை உள்ளிட்ட அளவுகள்  சரிபார்க்கப்பட்டன.

வட்டார மருத்துவர் வளர்மதி தலைமையிலான 10க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை  நடத்தி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தனர். தொடர்ந்து முனியாண்டி கோயில், காளியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில்களில் பரிசு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.   பிறகு மேளதாளம் முழங்க கோயில் காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. வாடிவாசல் வழியாக முதலில் முனியாண்டி கோயில் காளை  உள்ளிட்ட 5 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, அடக்க ‘காளையர்கள்’ போட்டி  போட்டுக் கொண்டு பாய்ந்தனர்.

தென் மண்டல ஐ. ஜி சண்முக ராஜேஸ்வரன் மேற்பார்வையில், மதுரை எஸ். பி மணிவண்ணன் தலைமையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பொதுமக்கள் ஜல்லிக்கட்டை  காணும் வகையில் அலங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் உட்பட 3 இடங்களில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டை காண அலங்காநல்லூர்  வந்திருந்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தனி கேலரி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த கேலரியை போலீசார் மற்றும் வருவாய்த் துறை  அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.   பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் சிறப்பு பரிசாக கார், அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறப்பு பரிசாக கார்  வழங்கப்பட உள்ளது.

தவிர ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கட்டில், கிரைண்டர், மிக்சி, சைக்கிள், பேன் உள்ளிட்ட பரிசுகளும்  வழங்கப்பட்டன.

.

மூலக்கதை