குமரி எஸ்ஐ கொலையில் கைதானவர்கள் சிறையில் அடைப்பு 20 இடங்களில் போலீசாரை கொல்ல தீவிரவாதிகள் திட்டம்: மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களை தகர்க்கவும் சதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குமரி எஸ்ஐ கொலையில் கைதானவர்கள் சிறையில் அடைப்பு 20 இடங்களில் போலீசாரை கொல்ல தீவிரவாதிகள் திட்டம்: மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களை தகர்க்கவும் சதி

நாகர்கோவில்: குமரி எஸ்ஐ வில்சன் கொலையில் கைதானவர்கள் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களிடம் நடந்த 15 மணிநேர  விசாரணையில் தமிழக போலீசார் 20 பேரை கொல்லவும், முக்கிய நகரங்களை தகர்க்கவும் திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் - இன்ஸ் பெக்டர் வில்சன்( 57)  துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார்  இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் வாயிலாக தெரியவந்தது.
ஏற்கனவே இவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதுடன், நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து தீவிரவாத  தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வந்ததும் தெரிய வந்தது. எனவே இவர்களை பிடிக்க, குமரி மாவட்ட எஸ். பி.

நாத் தலைமையில் 10  தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பிறகு, கடந்த 14ம் தேதி, கர்நாடக மாநிலம் உடுப்பியில்  போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் குமரி மாவட்டம் கொண்டு  வரப்பட்டனர். சுமார் 15 மணி நேர விசாரணைக்கு பிறகு, நேற்று இரவு குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்துல் சமீம் மற்றும் தவுபீக்  ஆகியோர் மீது ஏற்கனவே இந்து இயக்க முக்கிய தலைவர்களை கொல்ல முயன்றதாக வழக்குகள் உள்ளன.

இவர்களின் கூட்டாளிகளான முகமது  ஹனிப் கான், இம்ரான்கான், முகமது சையது ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கடந்த 7ம் தேதி பெங்களூரில் கைது செய்தனர்.

இவர்களின் கைதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு போலீஸ் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 8ம்தேதி இரவு  களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ். ஐ.

வில்சனை சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து தங்களது செயல்பாடுகளுக்கு  போலீஸ் இடையூறாக இருந்து வருவதால், போலீசை குறி வைத்து தாக்குதலை தொடர முடிவு செய்துள்ளனர்.

20 இடங்களில் போலீஸ் மீது  தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்து தங்களது திட்டத்தை தொடங்கி உள்ளனர்.

முதலில் இவர்கள்  களியக்காவிளை போலீஸ் நிலையத்தை தான் குறி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காததால், களியக்காவிளை  போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள, சோதனை சாவடியில் இருந்த எஸ். ஐ.

வில்சனை சுட்டு கொன்றுள்ளனர்.

வில்சன் கொலை நடந்து இரு நாட்களுக்கு பின் டெல்லியில், தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக காஜா மைதீன் (52), அப்துல் சமது (28),  சையது அலி நவாஸ் (32) ஆகியோரை கைது செய்தனர்.

இதில் சையது அலி நவாஸ், நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர்  ஆவார். இவரும், அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோரின் கூட்டாளி ஆவார்.


அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தியதில் தங்களுடைய மற்ற கூட்டாளிகள் காவல் துறையினரிடம் பிடிபட்டதாலும்,  தங்களுடைய சதி திட்டங்களை நிறைவேற்ற முடியாததாலும் அதற்கு பதிலாக நிர்வாகத்தினரையும், காவல்துறையினரையும் பழி தீர்க்க வேண்டும்  மற்றும் அச்சுறுத்தல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கு நன்கு தெரிந்த இடமான களியக்காவிளைக்கு வந்து சோதனை சாவடி  பணியில் இருந்த போலீசை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவித்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரில் அப்துல் சமீமுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது  ெதரியவந்துள்ளது. இவர் மீது பெங்களூர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு ஒன்றில் இவரது ஐஎஸ் தொடர்பு பற்றி விவரித்துள்ளனர்.

தற்போது  தாங்கள் ஒரு அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளவர்கள் எந்த அமைப்பின் பிரதிநிதிகள் என்று தெரிவிக்கவில்லை.

இருப்பினும் இவர்களிடம் விசாரணை முழுமையடையும் தருவாயில் மட்டுமே அது பற்றிய முழு விவரம் தெரியவரும் வாய்ப்பு உள்ளது.

மேலும் சதி  திட்டம் தீட்டியது தொடர்பான விபரங்களையும், மொத்தம் எத்தனை பேர் தங்களது அமைப்பில் செயல்படுகின்றனர் என்பதையும் அவர்கள்  கூறவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அடுத்தடுத்து கூடுதல் கைது  நடவடிக்கைகள் இருக்கலாம் என தெரிகிறது.

தங்களது இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில், மிக முக்கியமான நகரங்களில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும் இவர்கள் திட்டமிட்டு  இருந்ததாக கூறப்படுகிறது. அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் ஏற்கனவே சென்னை சிறையில் இருந்துள்ளனர்.



இவர்கள் போன்று கைதாகி சிறையில்  இருந்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, தங்களது செயல்பாடுகளை விரிவுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர்  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர்.

தாங்கள் மறைந்தாலும் தங்களது திட்டம் நிறைவேறும் என்று  ஒரு கட்டத்தில் அப்துல் சமீம் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். தற்போது இவர்கள் கைதாகி இருப்பதால், இவர்களின் கூட்டாளிகள் ஏதாவது  தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்பதால் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுப்பிரிவு கூறி உள்ளது.

எனவே  தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

15 நாள் போலீஸ் காவலில் எடுக்க திட்டம்
எஸ். ஐ. வில்சன் கொலையில் கைதாகி நேற்று இரவு குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டையில் உள்ள மத்திய  சிறையில் அடைக்கப்பட்டு தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு பின்னே இவர்கள் எந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்தனர். ஐ. எஸ்.

இயக்கத்துடன் தொடர்பு உண்டா?  என்பதை உறுதிப்படுத்த முடியும் என எஸ். பி. நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும்  கத்தி கைப்பற்றப்பட வில்லை. அந்த துப்பாக்கி மற்றும் கத்தியை இவர்கள் தங்களது கூட்டாளிகளுக்கு கைமாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.   எனவே இந்த துப்பாக்கியை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.



தவுபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். திருவனந்தபுரம் விதுரா  பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் சையது அலி என்பவர் தான், இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து இருந்தார்.

அவர்  உதவியுடன் கொலை நடந்த அன்று காலை இவர்கள் இருவரும் கையில் பையுடன், நெய்யாற்றின்கரை பகுதியில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள்  கிடைத்தன. எனவே சையது அலி பிடிபட்டால், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி எங்கு இருக்கிறது என்பது தெரிய வரும் என தனிப்படை  போலீசார் கூறினர்.

காவலில் எடுத்த பின்னரே இது பற்றிய முழு விவரங்களையும் கூற முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை