எளாவூர் அருகே டேங்கரில் பெட்ரோல் கசிவு: ரயில்கள் நிறுத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எளாவூர் அருகே டேங்கரில் பெட்ரோல் கசிவு: ரயில்கள் நிறுத்தம்

கும்மிடிப்பூண்டி:  எளாவூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் சென்ற ஆயில் டேங்கரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில்கள்  நிறுத்தப்பட்டன.   கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சென்னை-ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர் வேலை மற்றும்  வியாபாரம் தொடர்பாக மின்சார ரயில்களில் சென்று வருகின்றனர்.

மேலும், இவ்வழித்தடத்தில் வாரம் 2 முறை மணலி இந்தியன் ஆயில்  நிறுவனத்தில் இருந்து டேங்கர்கள் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் சரக்கு ரயிலில் ஆந்திராவுக்கு எடுத்து  செல்லப்படுகிறது.

  இந்நிலையில், மணலியில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுமார் 35 லட்சம் லிட்டர் பெட்ரோலை டேங்கரில் ஏற்றிக்கொண்டு நேற்றிரவு  ஒரு சரக்கு ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் எளாவூர் அருகே வரும்போது, டேங்கரில் இருந்து  பெட்ரோல் கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த ரயில் எளாவூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் இந்தியன் ஆயில்  நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

அவர்கள் பெட்ரோல் டேங்கர்களை ஆய்வு செய்து, பெட்ரோல் கசிவை சரிசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த சரக்கு ரயில் நேற்றிரவு 10 மணியளவில் ஆந்திரா நோக்கி கிளம்பி சென்றது.

இதனால் அந்த ரயில் மார்க்கத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.


.

மூலக்கதை