செங்கல்பட்டு அருகே திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி : 50 கிராம மக்கள் கண்டுகளித்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செங்கல்பட்டு அருகே திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி : 50 கிராம மக்கள் கண்டுகளித்தனர்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதை, 50க்கு மேற்பட்ட கிராம மக்கள் கண்டுகளித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பல்லக்கில் வீதியுலாவாக செங்கல்பட்டு அடுத்த பழையசீவரம், திருமுக்கூடல்  ஆகிய கிராமங்களுக்கு வருவது வழக்கம்.

பக்தர்களால் சுமார் 20 கிமீ தூரம் சுமந்து கொண்டு வரப்படும். அந்த வகையில் இந்தாண்டு நேற்று  முன்தினம் பல்லக்கில் பழைய சீவரத்துக்கு வரதராஜ பெருமாள் வந்தார்.

ஏராளமான பொதுமக்கள், பெருமாளை தரிசிக்க வந்திருந்தனர். திருமுக்கூடலில் மலையில் அமர்ந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள், மலையடிவாரத்துக்கு வந்து, வரதராஜ பெருமாளை வரவேற்றார். பின்னர்,  அவரை மலைக்கு அழைக்கு சென்றார்.

அங்குள்ள மண்டபத்தில் வரதராஜ பெருமாள் தங்க வைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாளை சந்திக்க லட்சுமி நாராயண பெருமாளுடன் காஞ்சி வரதராஜ  பெருமாள் வருகை தந்தார்.

இருவரையும், சாலவாக்கம் கோதண்ட பெருமாள், காவிதண்டலம் கோதண்ட பெருமாள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இரவு 7 மணியளவில் செய்யாறு, வேகவதி ஆறு, பாலாறு சங்கமிக்கும் திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை  காண செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பழைய சீவரம், காவிதண்டலம், சங்கராபுரம், திருமுக்கூடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வரதராஜ பெருமாள் புறப்பட்டார்.

.

மூலக்கதை