கொளத்தூர் 100 அடி சாலையில் பஸ்மீது பைக் மோதி வாலிபர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொளத்தூர் 100 அடி சாலையில் பஸ்மீது பைக் மோதி வாலிபர் பலி

புழல்: கொளத்தூர் 100 அடி சாலையில் நின்று கொண்டிருந்த மாநகர பஸ்சின்மீது பைக் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியானார்.   சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல்சாவடி, செக்கஞ்சேரி காலனி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (39). இவர்  ஒரு தனியார் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த 15ம் தேதி வேலைக்கு செல்ல, வீட்டிலிருந்து  ஹெல்மெட் அணிந்து சரவணன் பைக்கில் கிளம்பினார்.   இவர் கொளத்தூர் 100 அடி சாலையில் அதிகாலை 5 மணியளவில் செந்தில் நகர் அருகே பைக்கில் வந்தார். அப்போது சரவணனின்  கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகர பஸ் மீது வேகமாக மோதியது.

இதில் பைக்கில் இருந்து சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ஹெல்மெட் உடைந்து தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரவணனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை