103வது பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை

தமிழ் முரசு  தமிழ் முரசு
103வது பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளையொட்டி அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மறைந்த முதல்வரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு  சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின்  கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர்  சிலைக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதா சிலைக்கும் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து  அமைச்சர்கள்,  அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி,  எம்எல்ஏக்களும் எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.   இந்த நிகழ்ச்சியின்போது எம்ஜிஆர் மலரையும் முதல்வர் வெளியிட்டார்.

பின்னர்  முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அங்கு கூடி இருந்த அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும்  இனிப்புகள்  வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  விழாவில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை, கிண்டி எம். ஜி. ஆர்.   மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு இன்று காலை 10. 45  மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணை தலைவர், அரசு தலைமை கொறடா, அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து  கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பல்கலைக்கழக  துணைவேந்தர் சுதா சேஷய்யன் நூல்களை வழங்கி வரவேற்றார். எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், எம்ஜிஆர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, அவர் நடித்த  திரைப்படங்களில் உள்ள பாடல்களை ஒலிபரப்பி அதிமுகவினர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.

.

மூலக்கதை