ஜெ.ஜெ.நகர் 93-வது வார்டில் சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு: மக்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெ.ஜெ.நகர் 93வது வார்டில் சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு: மக்கள் அவதி

அண்ணாநகர்: ஜெ. ஜெ. நகர் 93-வது வார்டில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளினால்  மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி, 93-வது வார்டான ஜெ. ஜெ. நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இங்கிருந்து குப்பைகளை துப்புரவு  பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. பின்னர், அப்பகுதியில் அமைந்துள்ள மையத்தில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்க கொண்டு  செல்லப்படுகிறது.

எனினும், ஜெ. ஜெ. நகர் சாலை பகுதிகளில் குப்பை கொட்டும் தொட்டிகள் அமைக்கப்படவில்லை. இதனால், ஜெ. ஜெ. நகர் முழுவதும் சாலையோரங்களில் ஏராளமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இக்குப்பைகளை அங்குள்ள  நாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறுவதால், சாலை முழுவதும் பரவியுள்ளன.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு  சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இங்கு தேங்கியுள்ள குப்பைகளால் அதிகளவு கொசுக்கள் பரவி, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் மர்ம காய்ச்சல்களை  ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வார்டு சுகாதார அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், ஜெ. ஜெ. நகர் பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற்கும், அங்கு  இரும்பிலான தொட்டிகள் அமைப்பதற்கு இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஜெ. ஜெ. நகர் 93-வது வார்டில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முன், அப்பகுதிகளில் குப்பை தொட்டிகளை  அமைக்கவும், சாலையோர குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் சம்பந்தப்பட்ட மண்டல சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை