புதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை!

தினகரன்  தினகரன்
புதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காததால் விரக்தியில் இருந்த மக்களுக்கு, தற்போது பெய்து வரும் மழையால் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமானதுதான். ஆனால், அந்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டுதான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. அதாவது, ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2,000 வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. ஒரு கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் அளவும் அந்தப் பகுதிகளில் அதிகரித்து வந்தது. காற்று மாசும் பெருகியது. எனவே, காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு பல ஆயிரம் கோடிகளை வாரி இறைத்து விட்டது. ஆனாலும், 30 இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத்தீ எரிந்து வந்தது. இந்த நிலையில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது. அந்த மழை நேற்றும் தொடர்ந்தது. இதனால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து போராடி வரும் தீயணைப்பு வீரர்களுக்கு இந்த பலத்த மழையால் சற்று நிவாரணம் கிடைத்தாலும் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரம் காட்டுத் தீயை முழுமையாக அணைக்க இந்த மழை போதாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை