டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி

தினகரன்  தினகரன்
டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி, டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டு நேற்று செனட் சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் இம்முறையும் போட்டியிடுகிறார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, ஐரோப்பிய நாடான உக்ரைனின் உதவியை டிரம்ப் நாடியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரை பதவி நீக்குவதற்கான கண்டன தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, செனட் சபை விவாதத்தின் போது, சாட்சியங்களும் அழைக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் கூறியதால், அவர்களை புறக்கணித்து, தீர்மானத்தை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினர் முயற்சித்தனர். இதனால், டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக செனட் சபைக்கு அனுப்பப்படாமல் இருந்தது. பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி, வேண்டும் என்றே இந்த தீர்மானத்தை அனுப்பாமல் இழுத்தடிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.இந்நிலையில், பெலோசி நேற்று இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு செனட் சபைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், ``தேசத்தின் பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையிலும், உறுதி பிராமணத்தை மீறும் வகையிலும் அதிபர் டிரம்ப் நடந்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதனால், அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார். இருப்பினும், செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை