ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வி: ‘இருதரப்பு பிரச்னை’ என உறுப்பு நாடுகள் பதிலடி

தினகரன்  தினகரன்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வி: ‘இருதரப்பு பிரச்னை’ என உறுப்பு நாடுகள் பதிலடி

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் மீண்டும் தோல்வியடைந்தது. இது இருதரப்பு விவகாரம் என உறுப்பு நாடுகள் கூறிவிட்டன. ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டம் நியூயார்க்கில் நேற்று நடந்தது. இதில் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர் தலைமை தாங்கினார். அப்போது, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிரச்னையை பாகிஸ்தான் பிரதிநிதிகள் எழுப்பி, இந்தியா மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும், காஷ்மீர் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப சீனா 3வது முறையாக நேற்று முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  இதற்கு பதில் அளித்த ஐரோப்பிய தூதர், ‘‘இது உள்நாட்டு சம்பந்தப்பட்ட விஷயம். இப்பிரச்னையை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இது முக்கியமான விஷயம் அல்ல,’’ என்றார். இதனால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் மீண்டும் தோல்வி அடைந்தது. இது குறித்து ஐநா.வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறுகையில், ‘‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்ததை நாங்கள பார்த்தோம். பாகிஸ்தான் பிரதிநிதிகள் எழுப்பிய பிரச்னையும், தொடர்ந்து கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதுவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எடுபடவில்லை. இந்த விவகாரத்தை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பல நட்பு நாடுகள் கூறிவிட்டன. இந்த முயற்சி திசை திருப்பும் விஷயமாக பார்க்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் இந்தியாவுடன் உறவை, இயல்பாக வைக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் கவனம் செலுத்தும் என நம்புகிறோம்,’’ என்றார்.

மூலக்கதை