பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு: உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் நாளை நடக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு: உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் நாளை நடக்கிறது

மதுரை: அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டு காளைகளோடு, மாடுபிடி ‘காளைகள்’ மல்லுக்கட்டியது காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இரு நாள் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வெளிநாட்டில் இருந்து ஏராளமான பயணிகள் போட்டியை கண்டுகளித்தனர்.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பொங்கல் திருநாளில் அவனியாபுரத்திலும், அடுத்த நாளில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது. மதுரை கலெக்டர் வினய், ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

முன்பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் பாலமேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 6 மணி முதல் டோக்கன் எண் அடிப்படையில் வரிசையாக காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை நடந்தது. இதே போல் பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள 936 மாடுபிடி வீரர்களின் உடல் தகுதியை வட்டார மருத்துவர் வளர்மதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து காலை 8 மணிக்கு கலெக்டர் வினய், நீதிபதி மாணிக்கம் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர்  கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். முதலில் மகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி காளை, மஞ்சமலை சாமி காளை உள்ளிட்ட கோயில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

கோயில் காளைகளை யாரும் பிடிக்கவில்லை.

ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப் புறப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர்.

காளைகளை அடக்கிய காளையர்களுக்கு இருசக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கும் வீரருக்கு சிறப்பு பரிசாக கார் வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தப் போட்டியை வெளிநாட்டில் இருந்து வந்திருந்த பயணிகள் கண்டுகளித்தனர்.
 நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டி பட்டி, தேவராயபுரம் வெள்ளாப்பட்டி ஆகிய இடங்களில் இன்று எருது விடும் போட்டி நடந்தது.


அவனியாபுரம்: அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது.   துவக்கம் முதலே ஜல்லிக்கட்டு களை கட்டியது. இளைஞர்கள் உற்சாகமாக களத்தில் குதிக்க, காளைகளும் சளைக்கவில்லை.

களத்தில் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டின. அடக்க வந்த வீரர்களை காளைகள் சில தூக்கி பந்தாடின.

ஆக்ரோஷ காளைகளை கண்டு, வீரர்கள் சிலர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பிடிபடாத முரட்டுக் காளைகளுக்கும் பரிசுகள் குவிந்தன.

9 சுற்றுக்களாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, கோவை, கரூர், நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 641 காளைகளும், 607 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி தூக்கியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 71 பேருக்கு காயம் ஏற்பட்டது. தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

படுகாயமடைந்த 11 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் மதுரை திருப்பாலையை சேர்ந்த அழகர் கவலைக்கிடமாக உள்ளார்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. சேலம் மாவட்டம் கூலமேட்டில் 19ம் தேதி எருது விடும் போட்டி நடைபெறுகிறது.


கெத்து காட்டிய ‘புதுகை காளை’
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று கெத்து காட்டிய முதல் காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளை தேர்வு செய்யப்பட்டது.

இதில் 2வது பரிசை மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த காந்தியின் காளையும், 3வது பரிசை அன்புராணியின் காளையும் வென்றது.  

பரிசாக பசுவும், கன்றும்
ஜல்லிக்கட்டை  ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு பாலமேட்டில் புதுமையாக ஒரு பரிசு  வழங்கப்பட உள்ளது.

நாட்டு மாடுகளை பாதுகாக்கும் நோக்கில், ஜல்லிக்கட்டில்  பிடிபடாத மாடுகளில் சிறந்த மாடு தேர்வு செய்யப்பட உள்ளது.

அந்த மாட்டின்  உரிமையாளருக்கு ஒரு உயர் ரக நாட்டுப் பசு, கன்றுடன் இன்று பரிசாக வழங்கப்பட  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை