மன்னிப்பு கேட்டு விட்டுத்தான் படத்தைத் துவங்குவேன்: வெற்றி மாறன்

தினமலர்  தினமலர்
மன்னிப்பு கேட்டு விட்டுத்தான் படத்தைத் துவங்குவேன்: வெற்றி மாறன்

நடிகர் தனுஷ் நடிப்பிலு, நடிகை மஞ்சு வாரியர் நடிப்பிலும் வெளியான படம் அசுரன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். இந்தப் படம் வெளியாகி, வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. படம் வெளியாகி நூறு நாட்களை கடந்து விட்ட நிலையில், படத்துக்கான நூறாவது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொண்டு, இயக்குநர் வெற்றி மாறன் பேசியதாவது: நான் மிகவும் கோபப்படுவேன். என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், நான் என்னுடைய உதவியாளர்களை அழைப்பேன். அவர்களிடம், நான் உங்களிடம் கோபப்படுவேன். அதற்கு உங்களுடைய தவறு காரணம் அல்ல. எனது இயலாமை தான் காரணம். இருந்தாலும், அதை யாரிடம் காட்ட முடியும்? உங்களிடம்தான் காட்டுவேன்; அதை நீங்கள் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அதற்காக, என்னை இப்பவே மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விட்டுத்தான், படபிடிப்பை ஆரம்பிப்பேன்.

2003ஆம் ஆண்டு முதல் தனுஷுடன் இணைந்து பணியாற்றினாலும், அசுரன் படம் எங்களுக்கு முக்கியமான படைப்பு. தனுஷ் எப்போதுமே இயக்குநரின் நடிகராக இருப்பார். எனக்கு, இந்தப் படத்தின் மீது இருந்ததைவிட தனுஷுக்கு, அவரது கதாபாத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை மிக அதிகம். இந்த வேடம் அவர் செய்ததால் மட்டுமே இப்படி உயிரோட்டமாக அமைந்தது. தயாரிப்பாளர் தாணுவும், எங்கள் உடன் இருந்து அனைத்து விதமான சுதந்திரத்தையும் அளித்ததோடு ஊக்கமும் தந்தார். கதாநாயகி மஞ்சு வாரியர் குறித்துக் கூற வேண்டும் என்றால், இந்த அளவுக்கு மனப்பூர்வமாக வேலை செய்யக்கூடிய ஒரு நடிகையை, இதுவரை நான் பார்த்ததில்ல என்றார்.

மூலக்கதை