போகி பண்டிகையில் டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பு சென்னை புகை மூட்டத்தால் திணறியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
போகி பண்டிகையில் டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பு சென்னை புகை மூட்டத்தால் திணறியது

* மூச்சுவிட முடியாமல் மக்கள் அவதி
* வாகனங்கள் ஊர்ந்து சென்றன
* விமானம், ரயில் சேவை பாதிப்பு

சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தால் இன்று சென்னை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. புகையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. இதனால், விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை, நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப பொங்கல் தினத்தை வரவேற்கும் விதமாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை கொண்டாட்டம் இன்று அதிகாலை முதல் தொடங்கியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய துணிகள், பழைய பாய் மற்றும் தேவையில்லாத பொருட்களை வீட்டு வாசலில் போட்டு எரித்தனர்.

அவை கொழுந்துவிட்டு எரியும் போது சிறுவர்கள் மேளம் கொட்டி உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடினர். சிலர், டயர், பிளாஸ்டிக் பொருட்களையும், பழைய பொருட்களையும் வீடுகளின் முன்பாக போட்டு  எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் விண்ணை முட்டும் அளவுக்கு காட்சியளித்தது.

அது மட்டுமல்லாமல் கடுமையான பனி மூட்டம் வேறு காணப்பட்டது. புகையும், பனிமூட்டமும் சேர்ந்து அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் காலையில் வாக்கிங் சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர்.

கடுமையான புகை மூட்டத்தால் இன்று காலை முதல் வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. எதிரே மற்றும் முன்னால் சென்ற வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்தது.

வாகனங்களில் வந்தவர்கள் காலை 9 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி பயணம் செய்த காட்சியை காணமுடிந்தது. சூரியனே பகல் 9 மணிக்குத்தான் தெரிந்தது. அதேபோன்று பாதை தெரியாத அளவுக்கு தண்டவாளங்கள் இருந்ததால் மின்சார ரயில்கள் மிகவும் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டது. வெளியூரில் இருந்து சென்னை வந்த தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரல், நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் காலதாமதாக வந்தன.

அதே போல காலையில் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், ரயில்களில் பயணம் செய்தவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.கடும்பனி, புகையால் சென்னை  விமானநிலையத்தில் காலை 6  மணிக்கு மேல் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வரவேண்டிய மஸ்கட், சார்ஜா, அபுதாபி, கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை, புனே, பெங்களூர், அகமதாபாத், கொல்கத்தா   உள்ளிட்ட 16 விமானங்கள் தாமதமாக வந்தன.

அதே போல் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, வாரணாசி, கோவை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொல்கத்தா, கொச்சி, மஸ்கட், அபுதாபி, கோலாலம்பூர், கொழும்பு, சிங்கப்பூர், துபாய், லண்டன்  உள்ளிட்ட 26 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை விமானநிலையத்தில் மொத்தம் 42 விமானங்கள் ஒரு  மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக  இயக்கப்பட்டன.

மொரிசீயஸ்சிலிருந்து பெங்களூர் வழியாக காலை 6. 15 மணிக்கு  சென்னை வந்து விட்டு மீண்டும் காலை 7. 45 மணிக்கு சென்னையிலிருந்து மொரீசியஸ்  செல்லும் ஏர்மொரீசியஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. விமான சேவைகள்  பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில்  பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

ஆனால்  விமானங்கள் தாமதம் பற்றி பயணிகளுக்கு முறையாக எந்த அறிவிப்பும்  செய்யப்படவில்லை.

சென்னையிலிருந்து கடந்த 3 நாட்களாக வெளியூருக்கு பல லட்சம் பேர் சென்று  விட்டனர். இதனால் குறைவான வாகனங்கள் மட்டுமே இயங்கியதை காணமுடிந்து.   தொடர்ந்து, டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிப்பதை  கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிப்பவர்களை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், அதையும் மீறி நகரின் பல இடங்களில் எரித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


.

மூலக்கதை