பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம்: கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனை சூடுபிடித்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம்: கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனை சூடுபிடித்தது

சென்னை: பொங்கல் திருநாளை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் கரும்பு, மஞ்சள், காய்கறி உள்ளிட்ட விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால், ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதே போல சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.

ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடைசி நேரத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக குடும்பம், குடும்பமாக கிளம்பியுள்ளனர்.

இதனால் எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது. இதேபோல் சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சென்னை  கோயம்பேடு, தாம்பரம் புதிய பேருந்து நிலையம்(மெப்ஸ்), தாம்பரம் ரயில்  நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, ேக. கே. நகர் ஆகிய இடங்களில்  இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10ம் தேதி  முதல் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று(13ம் தேதி) வரை இந்த  சிறப்பு பஸ்களில் மொத்தம் 6,10,736 பேர் பயணம் செய்தனர்.

இன்றும்  வழக்கமாக இயக்கப்படும் 2225 பேருந்துகளில் 1,441 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடைசி நாள் என்பதால் இன்று பஸ்களில் கூட்டம் அதிகரிக்க  வாய்ப்புள்ளது.

இன்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அரசு பஸ்களில்  வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பொங்கல் பொருட்கள் விற்பனையும் களை கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அனைத்து பஜார்களிலும் வியாபாரம் சூடுபிடித்தது.

இந்தாண்டு கரும்பு விலை கடந்த ஆண்டை விட குறைந்து காணப்பட்டது. மதுரை, தேனி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரியான நேரத்தில் மழை பெய்ததால் விளைச்சல் அதிகமாக உள்ளது.

இதனால், இந்த பகுதிகளில் இருந்து கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சாலையோரங்களில் கரும்பு, மஞ்சள், மண்பானை, மண் அடுப்பு, அருகம்புல், பனங்கிழங்கு, கலர் கோலப்பொடி போன்றவை அமோகமாக விற்பனையாகின.

தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் பாத்திரக்கடைகளில் பொங்கல் சீர்வரிசை பாத்திரங்கள் வாங்கவும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகையன்று காலையில் பொங்கலை வைத்து விட்டு பின்னர் காய்கறிகளை கொண்டு சாம்பார், அவியல் வைப்பது வழக்கம்.

இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கத்தைவிட தக்காளி, கத்தரிக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, சிறுகிழங்கு, பீன்ஸ், முருங்கைக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வாங்க காலை முதலே கூட்டம், கூட்டமாக மக்கள் வந்தனர்.

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 300 லாரிகளில் கரும்புகள் வந்துள்ளன.

15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கரும்பு ரூ. 25க்கு விற்கப்பட்டது.

இது தவிர ஈரோடு, சேலம்,  ஆந்திர மாநிலம் காளகஸ்தி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மஞ்சள்  கொத்து வந்துள்ளது. 2 கொத்து கொண்ட ஒருகட்டு ரூ. 30க்கு விற்பனையானது.

இஞ்சி கொத்து ₹30, வாழை குருத்து ₹30 என விற்கப்பட்டது. சில  கடைகளில் இந்த விலை ₹5 முதல் ₹10 வரை கூடுதலாக விற்கப்பட்டது.

மஞ்சள் வாழைப்பழம் ஒரு தார் (தரத்திற்குஏற்ப) 300 ரூபாய் முதல் 500ரூபாய் வரை விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று காய்கறி விலை அதிகரித்து தான் காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் காய்கறி விலை கணிசமாக குறைந்துள்ளது.

இது குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், காய்கறி விலை குறைந்துள்ளது. பல்லாரி வெங்காயம் ரூ. 60 (பழைய விலைரூ. 100), சின்னவெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ரூ. 100(200), பீன்ஸ் ரூ. 40(60), கேரட் ரூ. 50(60), பீட்ரூட் 25(30), முட்டை கோஸ் 15(25), காலிப்பிளவர் 20(30), உருளை 30(30), தக்காளி 20(20), அவரைக்காய் 30(50), வெண்டைகாய் 35(45), முள்ளங்கி ரூ. 15(20), பச்சை பட்டானி ரூ. 45(50), கோவக்காய் ரூ. 20 (30), கொத்தவரங்காய் ரூ. 20 (30), பச்சைமிளகாய் ரூ. 25 (30), குடை மிளகாய் ரூ. 40(50), கத்தரிக்காய் ரூ. 25(30), சவ்சவ் ரூ. 15(20), முருங்கைகாய் ரூ. 100(150), நூக்கல் ரூ. 20(25), சேனைகிழங்கு ரூ. 30(30), சேப்பக்கிழங்கு ரூ. 25(30), பச்சை மொச்சை ரூ. 40(40), இஞ்சி ரூ. 60, ரூ. 70(120)  என்றும் விற்பனையாகிறது.

ஒருவாழைக்காய் ரூ. 6, ரூ7, ரூ. 8க்கும் விற்பனையாகிறது.

பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில் மூலமாக சுமார் 12 லட்சம் பேரை பயணம் செய்தததாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை