ஆஸி., மண்ணில் பகலிரவு டெஸ்ட்: கேப்டன் கோஹ்லி ‘ரெடி’ | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
ஆஸி., மண்ணில் பகலிரவு டெஸ்ட்: கேப்டன் கோஹ்லி ‘ரெடி’ | ஜனவரி 13, 2020

மும்பை: ‘‘ஆஸ்திரேலிய மண்ணில் பகலிரவு டெஸ்டில் விளையாட தயாராக இருப்பதாக,’’ இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ல் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் விளையாடின. இது டெஸ்ட் அரங்கில் நடத்தப்பட்ட முதலாவது பகலிரவு போட்டியானது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இது, இந்திய அணி பங்கேற்ற முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியானது.

ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடிய 7 பகலிரவு டெஸ்டிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய மண்ணில் பகலிரவு டெஸ்டில் விளையாட இந்திய கேப்டன் கோஹ்லிக்கு அழைப்புவிடுப்போம் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக கோஹ்லி கூறியது: ஆஸ்திரேலியாவின் எந்த பகுதியிலும் பகலிரவு டெஸ்டில் விளையாட தயாராக உள்ளோம். மைதானம் குறித்த கவலை எங்களுக்கு கிடையாது. விளையாட வாய்ப்பு கிடைத்தால் சுவாரஸ்யமாக இருக்கும். ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் உலகின் எந்த இடத்திலும் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் பகலிரவு டெஸ்டில் பங்கேற்க தயார்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டியில் இதுவரை 43 சதம் அடித்துள்ளார். சொந்த மண்ணில் மட்டும் 19 சதத்தை பதிவு செய்யதுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 சதம் அடிக்கும் பட்சத்தில், சொந்த மண்ணில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினை முந்தலாம். குறைந்தபட்சம் ஒரு சதமடித்தால் சச்சினின் சாதனையை சமன் செய்யலாம்.

ஒருநாள் அரங்கில் அதிகபட்சமாக 49 சதமடித்துள்ள சச்சின், சொந்த மண்ணில் 20 சதத்தை பதிவு செய்துள்ளார்.

எதற்கும் தயார்

கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ரோகித், தவான், ராகுல் என மூன்று பேரும் இன்று இடம் பெறும் பட்சத்தில், அணியின் நலனுக்காக பேட்டிங் வரிசையில் பின் வரிசைக்கு செல்லத் தயார்,’’ என்றார்.

மூலக்கதை