தமிழக அணி திணறல் | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
தமிழக அணி திணறல் | ஜனவரி 13, 2020

சென்னை: மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி திணறி வருகிறது. 

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஐந்தாவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. சென்னையில் நடக்கும் போட்டியில் தமிழகம், மும்பை மோதுகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது. இரண்டாவது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது. அபினவ் முகுந்த் (52), சூர்யபிரகாஷ் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அபினவ் முகுந்த் 58 ரன் எடுத்து அவுட்டானார். தமிழக அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பின் சரிவு துவங்கியது. சூர்யபிரகாஷ் (41), கேப்டன் பாபா அபராஜித் (14), பாபா இந்திரஜித் (6), அடுத்தடுத்து கிளம்பினர். 

கவுஷிக் காந்தி 60 ரன்கள் எடுத்து உதவினார். தினேஷ் கார்த்திக் 7 ரன் எடுத்தார். மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 249/7 ரன்கள் எடுத்து, 239 ரன்கள் பின் தங்கி இருந்தது. அஷ்வின் (32), சாய் கிஷோர் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

கைவசம் 3 விக்கெட் மட்டும் உள்ள நிலையில் இன்று கடைசி நாளில், மும்பை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவது சிரமம். தவிர ‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தால், ‘டிரா’ செய்து ஒரு புள்ளி பெறலாம். 

 

கேரளா வெற்றி

தும்பாவில் நடந்த ரஞ்சி போட்டியில் கேரளா அணி (227/10, 136/10), பஞ்சாப்பை (218/10, 124/10) 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூலக்கதை