‘காளையாக’ இந்தியா * ‘காட்டுத்தீயாக’ ஆஸி., | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
‘காளையாக’ இந்தியா * ‘காட்டுத்தீயாக’ ஆஸி., | ஜனவரி 13, 2020

மும்பை: மும்பையில் இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ‘ஜல்லிக்கட்டு காளையாக’ கலக்க நமது பேட்ஸ்மேன்களும்,  ‘தீயாக’ பந்துவீச ஆஸ்திரேலிய ‘வேகப்புயல்களும்’ தயாராக இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி விண்டீஸ், வங்கதேசம், இலங்கை என சற்று பலவீனமான அணிகளுக்கு எதிரான தொடர்களில் அதிகம் பங்கேற்றது. தற்போது வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்தமண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது, முதல் போட்டி இன்று மஹாராஷ்டிராவின் மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

குழப்பும் துவக்கம்

இலங்கை தொடரில் ஓய்வெடுத்த ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்புகிறார். காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவானும் ‘பார்மில்’ உள்ளார். வழக்கமாக இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும். இதனால் லோகேஷ் ராகுல் துவக்க இடம் கேள்விக்குறியாக உள்ளது. 4வது இடத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தக்கவைத்துள்ளதால், துவக்க ஜோடி குழப்பமாக உள்ளது. ‘மிடில் ஆர்டரில்’ கேப்டன் கோஹ்லி வரலாம். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், கேதர் ஜாதவ் அடுத்தடுத்து வருவதால் மணிஷ் பாண்டே இடம் சிரமம் தான்.

பவுலிங் எப்படி

பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா, நவ்தீப் சைனியுடன், முகமது ஷமி அல்லது ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்படலாம். சுழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கோல்கட்டா போட்டியில் (2017) ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்த குல்தீப் யாதவ், ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா இடம் பெறவுள்ளனர்.

முழு பலம்

ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் வந்துள்ளது. துவக்கத்தில்  வார்னர், கேப்டன் பின்ச், ‘மிடில் ஆர்டரில்’ ஸ்டீவ் ஸ்மித் என அனுபவ படை உள்ளது. சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்த லபுசேன், இந்தியாவுக்கு சிக்கல் தரலாம், தவிர ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரியும் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சில் ‘பிக் 3’ என்றழைக்கப்படும் மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் மிரட்டுகிறது. சுழலில் ஆடம் ஜாம்பா, ஆஷ்டன் ஏகார் அணிக்கு நம்பிக்கை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ல் நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2–3 என ஆஸ்திரேலியாவிடம் கோப்பை இழந்தது. இதற்கு இம்முறை பரிகாரம் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ராகுல் கீப்பர்

இந்திய அணியில் தவான், ரோகித், ராகுல் என மூவரும் இடம் பெறும் பட்சத்தில் பின் வரிசையில் பவுலிங்கை பலப்படுத்த ஜடேஜா, கேதர் ஜாதவ் சேர்க்கப்படுவர். இதனால் ரிஷாப் பன்ட் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் எனத் தெரிகிறது.

 

ஆடுகளம் எப்படி

மும்பை, வான்கடே மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் ‘டாஸ்’ வெல்லும் அணி பவுலிங் தேர்வு செய்யலாம்.

 

1

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் வான்கடே மைதானத்தில் 3 ஒருநாள் போட்டியில் மோதின. இதில் இந்தியா ஒன்றில் (2007) மட்டும் வென்றது. ஆஸ்திரேலியா இருமுறை (1996, 2003) வென்றது.

* 13 ஆண்டுக்குப் பின் இரு அணிகளும் இங்கு ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

 

மழை வருமா

மும்பையில் இன்று வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பு இல்லை.

 

4

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி 1984–85 முதல் 9 ஒருநாள் தொடரில் மோதியது. இதில் இந்தியா 4, ஆஸ்திரேலியா 5ல் கோப்பை வென்றன.

 

50

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 137 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 50, ஆஸ்திரேலியா 77ல் வென்றன. 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

* கடைசியாக மோதிய 6 போட்டிகளில், இரு அணிகளும் தலா 3 வெற்றி பெற்றன.

 

எதற்கும் தயார்

கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ரோகித், தவான், ராகுல் என மூன்று பேரும் இன்று இடம் பெறும் பட்சத்தில், அணியின் நலனுக்காக பேட்டிங் வரிசையில் பின் வரிசைக்கு செல்லத் தயார்,’’ என்றார்.

மூலக்கதை