கோஹ்லியை விட சிறந்தவரா ஸ்மித்: என்ன சொல்கிறார் காம்பிர் | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லியை விட சிறந்தவரா ஸ்மித்: என்ன சொல்கிறார் காம்பிர் | ஜனவரி 13, 2020

புதுடில்லி: ‘‘ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட இந்திய அணி கேப்டன் கோஹ்லி தான் சிறந்த பேட்ஸ்மேன்’’ என, முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 31. ஒருநாள் அரங்கில் 242 போட்டியில், 43 சதம், 55 அரைசதம் உட்பட 11,609 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீஸ் ஸ்மித் 30, இதுவரை விளையாடிய 118 ஒருநாள் போட்டியில் 8 சதம், 23 அரைசதம் உட்பட 3,810 ரன்கள் எடுத்துள்ளார். இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் அவ்வப்போது எழுகிறது.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் காம்பிர் கூறியது: ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட இந்திய கேப்டன் கோஹ்லி தான் திகழ்கிறார். இவர்களை ஒப்பிட முடியாது. இவ்வகை போட்டிகளில் இவர்களை ஒப்பிட மாட்டேன்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்க போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இவர் வழக்கம் போல 4வது இடத்தில் களமிறங்கப் போகிறாரா அல்லது 3வது இடத்தில் களமிறக்கப்பட்டு, லபுசேன் 4வது இடத்தில் வரப்போகிறாரா எனத் தெரியவில்லை.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி எப்படி பந்துவீச போகின்றனர் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் பந்துகளை இந்திய ‘டாப்–ஆர்டர்’ எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

மூலக்கதை