டெஸ்ட் காதல் காவியம்...என்றும் ஆனந்தம் பேரின்பம்: சொல்கிறார் சேவக் | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
டெஸ்ட் காதல் காவியம்...என்றும் ஆனந்தம் பேரின்பம்: சொல்கிறார் சேவக் | ஜனவரி 13, 2020

மும்பை: ‘‘ஐந்து நாட்கள் டெஸ்ட் என்பது அழகான காதல் கதை போன்றது. காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் காதலன் போல ‘ஸ்லிப்’ பகுதியில் ‘கேட்ச்சிற்காக’ கால் கடுக்க நிற்கும் ‘பீல்டர்’ என நிறைய சுவாரஸ்யமான சம்பவங்களை பார்க்கலாம். இதனை நான்கு நாட்களாக குறைக்கக் கூடாது,’’என, சேவக் கேட்டுக் கொண்டார்.

வழக்கமாக ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டியை, நான்கு நாட்களாக குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் சச்சின், கோஹ்லி, ரவி சாஸ்திரி, இங்கிலாந்தின் இயன் போத்தம் உட்பட பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டியில் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இவர்களது கருத்தை ஆதரித்த, இந்திய முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக் கூறியது:

மாற்றங்களை எப்போதும் வரவேற்கிறேன். பகலிரவு டெஸ்ட் போன்ற புதுமைகள், அதிகமான ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்க உதவுகிறது. ஆனால், எத்தகைய மாற்றமாக இருந்தாலும் ஐந்து நாட்களுக்குள் இருக்க வேண்டும். இதனை நான்காக குறைக்கக் கூடாது. அப்படி செய்வது, தண்ணீரில் இருந்து மீனை வெளியே துாக்கி வீசுவதற்கு சமம்.

‘டிரா’ அதிகமா: அதிகமான டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’ ஆவதால் விறுவிறுப்பு குறைகிறது என்கின்றனர். இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 223 டெஸ்டில், 31 போட்டிகள் தான் ‘டிரா’ ஆகின. ஐந்து நாட்கள் டெஸ்ட் என்பது அழகான காதல் கதை போன்றது. பேட்ஸ்மேனை வீழ்த்த பவுலர்கள் வியூகம் அமைப்பது, பதிலுக்கு பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி வெற்றிக்கு முயற்சிப்பது, காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் காதலன் போல ‘ஸ்லிப்’ பகுதியில் ‘கேட்ச்சிற்காக’ கால் கடுக்க ‘பீல்டர்’ நிற்பது என நிறைய சம்பவங்களை பார்க்கலாம். 

குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ‘டயாப்பரை’ அசுத்தமானால் தான் மாற்றுவர். இது போல ஐந்துநாட்கள் என்பதற்கு ஏதாவது சிக்கல் வந்தால் மாற்றலாம். தற்போதைய நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. 142 ஆண்டுகள் ஆன போதும், டெஸ்ட் போட்டி இந்திய அணி போல இளமையாகவும் உறுதியாகவும் உள்ளது. அதற்கு என்று ஆன்மா இருக்கிறது. நாட்களை குறைத்து ஆன்மாவை சிதைத்து விடாதீர்.

இவ்வாறு சேவக் கூறினார்.

 

பணமா...பாசமா

சேவக் கூறுகையில்,‘‘இளம் வீரர்கள் சூதாட்டம், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிவிடக் கூடாது. நீங்கள் கிரிக்கெட் மீது உண்மையில் பாசம் வைத்து விளையாடினால், தவறான பாதையில் செல்லக்கூடாது. வழிதவறினால் நீங்கள் பணத்திற்காக மட்டும் விளையடுகிறீர்கள் என அர்த்தமாகிவிடும். நீங்கள் சிறப்பாக விளையாடினால், பணம் உங்களை தேடி வரும். உங்களை யாராவது தவறான நோக்கில் தொடர்பு கொண்டால், உடனடியாக பி.சி.சி.ஐ., அல்லது ஐ.சி.சி.,க்கு தகவல் கொடுங்கள்,’’என்றார்.

மூலக்கதை