கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ரிஷிகேசை 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி : நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ரிஷிகேசை 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி : நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷிகேசை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளராக இருந்த கவுரிலங்கேஷை, கடந்த 2017 ெசப்டம்பர் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில், மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் விசாரணை நடத்தும் பொறுப்பு சிறப்பு விசாரணை படை(எஸ்ஐடி)யிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இதுவரை இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையின் முக்கிய குற்றவாளி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளதாக தெரியவந்தது. அதை தொடர்ந்து சிறப்பு படையினர், ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் உள்ள கட்ரஷ்கர் என்ற குக்கிராமத்தில் பதுங்கி இருந்த ரிஷிகேஷ் டிபோடிகர் (44) என்பவரை கடந்த 9ம் தேதி கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கவுரிலங்கேஷ் கொலை வழக்கு மட்டுமில்லாமல் இன்னும் சில முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் இந்துத்துவா எதிர்ப்பாளர்களின் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சிறப்பு விசாரணை படையினர் கைது செய்துள்ள ரிஷிகேஷ் டிபோடிகரை தன்பாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின், கர்நாடகம் அழைத்து வரும் படி வாரண்ட் பெற்றனர். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு அழைத்து வந்த எஸ்ஐடி படையினர், நேற்று காலை பெங்களூரு 1வது சிசிஎச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது எஸ்ஐடி சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்யும்போது, கவுரிலங்கேஷ் மட்டுமில்லாமல், பலர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தொடர்பு இருப்பது மேலோட்டாமாக நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் தெரிய வாய்ப்புள்ளது. ஆகவே 25 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அவரின் வாதம் கேட்டபின் ரிஷிகேஷை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து ரிஷிகேஷை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். 15 நாட்கள் நடக்கும் விசாரணையில் கவுரிலங்கேஷ் கொலை வழக்கு மட்டுமில்லாமல் எம்.எம்.கல்புர்கி உள்பட பல முற்போக்கு சிந்தனையாளகளின் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை