சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் அதிகரிப்பு : கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உயர்வு

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் அதிகரிப்பு : கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உயர்வு

புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஐந்துஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.மேலும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் இலக்கான, 2 – 6 சதவீதம் என்பதும், டிசம்பர் மாதத்தில் தாண்டப்பட்டுள்ளது. கடந்த, 2016 ஜூலை மாதத்துக்கு பின், முதல் தடவையாக, ரிசர்வ் வங்கியின் இலக்கை விட அதிகரித்துள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு நவம்பரில், 5.54 சதவீதமாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது, 4.62 சதவீதமாக இருந்தது.
டிசம்பர் மாதத்தில், இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது, உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு.வெங்காயத்தின் விலை, மார்ச் மாதத்திலிருந்தே தொடர்ந்து அதிகரித்து வந்தது. வெங்காயம் விலை உயர்வு, உணவுப் பொருள் பணவீக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.மேலும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததும் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், பொருட்கள் மற்றும் சேவை சம்பந்தப்பட்ட அடிப்படை பணவீக்கம், 3.7 சதவீதமாக உள்ளது.
இது, இதற்கு முந்தைய ஆண்டை விட, சற்று அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 14.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, அதற்கு முந்தைய மாதமான நவம்பரில், 10.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தானியங்கள் மற்றும் அவை சார்ந்த பொருட்களின் சில்லரை பணவீக்கம், 4.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது நவம்பரில், 3.71 சதவீதமாக இருந்தது.இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் சில்லரை பணவீக்கம், 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்விரண்டும், நவம்பர் மாதத்தில், 9.38 சதவீதமாக இருந்தது.முட்டையைப் பொறுத்தவரை, டிசம்பரில், 8.7 சதவீதமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய மாதமான நவம்பரில், 6.2 சதவீதமாக குறைந்திருந்தது.
எரிபொருள் பிரிவில் சில்லரை விலை பணவீக்க விகிதம், 0.7 சதவீதமாக உள்ளது.தொடர்ந்து பொருளாதார மந்தநிலை நிலவி வந்தாலும், அதிக பணவீக்க எதிர்பார்ப்பின் காரணமாக, ரிசர்வ் வங்கி, டிசம்பர் மாதத்தில், அதன் நிதிக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், இருக்கும் நிலையே தொடரும் என அறிவித்தது.
மேலும், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 6.1 சதவீதத்திலிருந்து குறைத்து, 5 சதவீதமாக அறிவித்தது.மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகமும், வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என அறிவித்தது.நாட்டின் மொத்த மதிப்பு கூட்டலான, ஜி.வி.ஏ., நடப்பு நிதியாண்டில், 4.9 சதவீதமாக இருக்கும் என, அரசு கணித்துள்ளது.
முக்கிய விபரங்கள்
உணவுப் பொருட்கள் பணவீக்கம், 14.12 சதவீதம் காய்கறிகள் பணவீக்கம், 60.5 சதவீதம் அடிப்படை பணவீக்கம், 3.7 சதவீதம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சேவை, 1.75 சதவீதம் ஆரோக்கிய பிரிவில் பணவீக்கம், 3.8 சதவீதம் வீட்டு விலை பணவீக்கம், 4.3 சதவீதம்

மூலக்கதை