மும்பை அபார பந்துவீச்சு முதல் இன்னிங்சில் தமிழகம் திணறல்

தினகரன்  தினகரன்
மும்பை அபார பந்துவீச்சு முதல் இன்னிங்சில் தமிழகம் திணறல்

சென்னை: மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஆதித்யா தாரே 154 ரன் விளாசினார். பிஸ்டா 41, லால்வானி, தமோர் தலா 21, சர்பராஸ் கான் 36, முலானி 87, அத்தார்தே 58 ரன் எடுத்தனர். தேஷ்பாண்டே 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய தமிழகம் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன் எடுத்திருந்தது. அபினவ் முகுந்த் 52, சூர்யபிரகாஷ் 11 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். முகுந்த் 58 ரன் எடுத்து (112 பந்து, 8 பவுண்டரி) தேஷ்பாண்டே பந்துவீச்சில் பிஸ்டா வசம் பிடிபட்டார். சூர்யபிரகாஷ் - கவுஷிக் காந்தி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது.சூர்யபிரகாஷ் 41 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் அபராஜித் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பொறுப்புடன் விளையாடிய கவுஷிக் காந்தி 60 ரன் (130 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து முலானி பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட, அடுத்து வந்த இந்திரஜித் 6, ரஞ்சன் பால் 0, தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். தமிழக அணி 88.4 ஓவரில் 195 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஆர்.அஷ்வின் - சாய் கிஷோர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தமிழகம் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்துள்ளது. அஷ்வின் 32 ரன், சாய் கிஷோர் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.  கை வசம் 3 விக்கெட் இருக்க, தமிழகம் இன்னும் 239 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை