பதவி நீக்க தீர்மானம் மூலம் அதிபர் டிரம்ப்பை தண்டிக்க போதிய சாட்சியங்கள் தாக்கல்: சபாநாயகர் நான்சி பெலோசி பேட்டி

தினகரன்  தினகரன்
பதவி நீக்க தீர்மானம் மூலம் அதிபர் டிரம்ப்பை தண்டிக்க போதிய சாட்சியங்கள் தாக்கல்: சபாநாயகர் நான்சி பெலோசி பேட்டி

வாஷிங்டன்: ‘‘அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான விசாரணை, செனட் சபையில் நடைபெறும் போது, அவரை தண்டிக்க போதிய சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’’ என சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார். இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், அவரது மகன் உக்ரேனில் முறைகேடாக சம்பாதிப்பது குறித்து விசாரணை நடத்தும்படி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப் போனில் பேசினார். இது அதிகார துஷ்பிரயோகம் என குற்றம் சாட்டி ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றினர்.இதை அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றினால்தான், அதிபர் டிரம்ப்பை பதவி நீக்க முடியும். ஆனால், செனட் சபையில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அதனால் இங்கு இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படும் என குடியரசுக் கட்சி கூறியுள்ளது. இந்த தீர்மானத்தை செனட் சபை விவாதத்துக்கு விரைவில் கொண்டு வந்த நிராகரிக்க குடியரசுக் கட்சி விரும்புகிறது. ஆனால், இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பாமல் சபாநாயகர் பெலோசி தாமதிப்பதாக குடியரசுக் கட்சி குற்றம் சாட்டியது. இந்த தீர்மானத்தை விரைவில் செனட் சபைக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ள பெலோசி, இது குறித்து கூறியதாவது:பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செனட் சபைக்கும் அனுப்புவதில் உள்ள தாமதத்துக்கு முக்கிய காரணங்கள் உள்ளன. சாட்சியங்களை பொதுமக்கள் அறிய விரும்பினோம். பதவிநீக்க தீர்மானத்தின் கீழ் அதிபரை தண்டிக்க போதிய சாட்சியங்கள் உள்ளன.அதிபருக்கு எதிராக புதிய இ-மெயில் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளார். அவரை செனட் சபைக்கு அழைத்து சாட்சியம் பெற வேண்டும். தனக்குள் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இதை தடுப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார். சாட்சியங்கள் படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமா அல்லது தீர்மானத்தை நிராகரித்து அதற்குரிய விலையை கொடுக்க வேண்டுமா என்பதை செனட் சபைதான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அதற்குள் பதவிநீக்க பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என ஆளும் குடியரசுக் கட்சி விரும்புகிறது.

மூலக்கதை