விமானத்தை சுட்டுவீழ்த்தியதை கண்டித்து ஈரானில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

தினகரன்  தினகரன்
விமானத்தை சுட்டுவீழ்த்தியதை கண்டித்து ஈரானில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

துபாய்; உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது ஈரான் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து கடந்த 8ம் தேதி புறப்பட்டு சென்ற உக்ரைன் விமானம் திடீரென நடுவானில் வெடித்து சிதறியது. இதில் இருந்த 176 பயணிகள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலோர் ஈரான் மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்கள். இந்த விமான விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்னைதான் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில் பின்னர், தன் ராணுவம்தான் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது.இந்நிலையில், உக்ரைன் விமானம் சுடப்பட்டதை கண்டித்து ஈரானில் நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள்  மீது ஈரான் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த காயங்களுடனும், மூச்சு திணறியும் அங்கிருந்து போராட்டக்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். இது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.

மூலக்கதை