போதை மாத்திரை வாங்குவதற்காக தி.நகர் முதல் செங்குன்றம் வரை நள்ளிரவில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி

தமிழ் முரசு  தமிழ் முரசு
போதை மாத்திரை வாங்குவதற்காக தி.நகர் முதல் செங்குன்றம் வரை நள்ளிரவில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி

* டிக் டாக் வீடியோ மூலம் 7 சிறுவர்கள் கைது
* 20 கிராம் தங்கம், 15 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: போதை மாத்திரை வாங்குவதற்காக தி. நகர் முதல் செங்குன்றம் வரை நள்ளிரவில் கத்தி முனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 7 சிறுவர்களை தனிப்படை போலீசார் டிக் டாக் வீடியோ உதவியுடன் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் தங்க நகை, 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தி. நகர், பாண்டி பஜார், நுங்கம்பாக்கம் பகுதிகளில் நள்ளிரவில் தனியாக நடந்து செல்லும் நபர்களை பைக்கில் வரும் ஒரு கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியும், மிரட்டியும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக தி. நகர் துணை கமிஷனர் அசோக்குமாருக்கு தொடர் புகார்கள் வந்தது.

அதன்படி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த  ஐடி நிறுவன மேலாளர் ராகேஷ்நாயர்(35) பணி முடிந்து வீட்டிற்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சைக்கிளின் ெசயின் கழன்றது. இதனால் ராகேஷ் நாயர், செயினை மாட்டிக் கொண்டிருந்தார்.

அப் போது, 3 பைக்கில் 6 மர்ம நபர்கள் வந்து ராகேஷ் நாயரிடம் உங்கள் செல்போனை கொடுங்கள் பேசிவிட்டு தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ராகேஷ் நாயர் செல்போன் தரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 6 பேர் கொண்ட கும்பல் இருப்பு கம்பியால் அடித்து உதைத்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது டிக் டாக் பதிவில் வாலிபர்கள் சிலர் வீடியோ பதிவு செய்திருந்தனர். இதை ஐடி நிறுவன மேலாளர் ராகேஷ் நாயர் பார்த்து என்னை தாக்கி செல்போன் பறித்து ெசன்ற நபர்கள் போன்று உள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.



அதன்படி தனிப்படை போலீசார் டிக் டாக் வீடியோ பதிவு மூலம் வாலிபர்களை தேடி வந்தனர். அப்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் என தெரியவந்தது.

அவர்கள் கொள்ளையடித்த செல்போன் மற்றும் பணத்தை வைத்து அனைவரும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று இருந்ததும் தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீசார் சிறுவர்கள் வசிக்கும் பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சுற்றுலா சென்று விட்டு 7 சிறுவர்களும் மகிழ்ச்சியாக தங்களது வீட்டிற்கு நேற்று முன்தினம் திரும்பினர். இதை கண்காணித்து கொண்டிருந்த தனிப்படை போலீசார் 7 சிறுவர்களை கூண்டோடு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட 7 சிறுவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து இரவு 10 மணிக்கு மேல் புளியந்தோப்பு முதல் தி. நகர் வரையும் பின்னர் தி. நகரில் இருந்து செங்குன்றம் வரையும் ைபக்கில் செல்வார்கள்.

அப்போது சாாலையில் தனியாக நடந்து செல்லும் வயதான நபர்களை குறிவைத்து அவசர உதவி என கூறி செல்போன் கேட்டு பேசுவது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பெண்களாக இருந்தால் முகவரி கேட்பது போல் நடித்து கத்தி முனையில் அவர்கள் அணிந்து இருக்கும் செயினை பறித்து வந்துள்ளனர்.

வழிப்பறிக்கு  யாரும் சிக்கவில்லை என்றால் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளை திருடி வந்துள்ளனர். இப்படி வழிப்பறி மற்றும் பைக் திருட்டில் கிடைக்கும் செல்போன், நகைளை ஒருவரிடம் மொத்தமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அப்படி விற்பனை செய்யும் போது, சிறுவர்கள் அனைவரும் பணத்திற்கு பதில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

சிறு வயதிலேயே போதைக்கு அடிமையானதால் போதை மாத்திரை மற்றும் கஞ்சா வாங்குவதற்காக 7 சிறுவர்களும் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

போதை தலைக்கு ஏறியதும் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் டிக் டாக் ஆப் மூலம் நகைச்சுவை, மிரட்டல் வீடியோக்கள் போட்டு வந்துள்ளனர். கடந்த ஓராண்டாக நள்ளிரவில் கத்தி மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கி வழிப்பறி செய்து வந்த சிறுவர்கள் போலீசாரிடம் சிக்காமல் சாதுரியமாக தப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் 7 சிறுவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் தங்க நகைகள், 15 செல்போன்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரை வாங்கி கொடுத்த முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். ஓராண்டாக போலீசாரிடம் சிக்காமல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 7 சிறுவர்கள் டிக் டாக் வீடியோவால் சிக்கி கொண்ட சம்பவம் சென்ைனயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை