குமரி எஸ்ஐயை கொல்ல வாடகை வீட்டில் தங்கி திட்டம் தீட்டியது அம்பலம்: மர்ம பேக்கில் இருந்தது வெடிகுண்டா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
குமரி எஸ்ஐயை கொல்ல வாடகை வீட்டில் தங்கி திட்டம் தீட்டியது அம்பலம்: மர்ம பேக்கில் இருந்தது வெடிகுண்டா?

நாகர்கோவில்: களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் இருவரும், குமரி - கேரள எல்லை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. இதற்கிடையே கண்காணிப்பு கேமிராவில் இவர்களிடம் இருந்து மர்ம பேக் கூட்டாளிகளுக்கு கை மாறியது தெரிய வந்துள்ளது.

அதில் வெடிகுண்டு இருந்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் வில்சன் (57) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஜிபி திரிபாதியும் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் குமரி மாவட்டம் திருவிதாங் கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க குமரி மாவட்ட எஸ். பி. நாத் தலைமையில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர கேரள போலீசாரும் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இருவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

கேரள அரசும் ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது.

ஆனால் கொலையாளிகள் குறித்து இதுவரை எந்த தவலும் இல்லை. இந்த நிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக பாறசாலை முதல் திருவனந்தபுரம் வரை பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொலையாளிகள் இருவரும் குமரி - கேரள எல்லையான நெய்யாற்றின்கரை பகுதியில் சுற்றி திரிந்ததற்கான வீடியோ காட்சிகள் சிக்கி உள்ளன.

8ம் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டு கொன்றனர். அதற்கு முதல் நாள், அதாவது 7ம் தேதி இரவு 8. 40 மணியளவில் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அருகே சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதே போல் 8ம் தேதி காலையிலும் அந்த பகுதியில் நடமாடியதற்கான வீடியோ காட்சிகள் உள்ளன. அப்போது இவர்கள் இருவரில் ஒருவரது கையில் பேக் ஒன்று இருக்கிறது.

சிறிது தூரம் சென்ற பின்னர் அதனை சாலையோரம் கடை பகுதியில் வைத்து விட்டு தொடர்ந்து நடந்து செல்கின்றனர்.

அதில் அவர்களது உடை, ஆயுதங்கள் ஏதேனும் இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது.

அந்த பேக்கில் என்ன இருந்தது என்பது தெரியவில்லை. அந்த பேக்கை கூட்டாளிகள் யாரேனும் எடுத்து சென்றார்களா, அதில் என்ன இருந்தது என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் நெய்யாற்றின்கரை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இவர்களுக்கு திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்த சையது அலி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார்.

கடந்த 7, 8 ம் தேதிகளில் இந்த வீட்டில் தான் இருந்துள்ளனர். அப்போது இவர்களின் கூட்டாளிகளுடன் ரகசிய ஆலோசனையும் நடத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

கொலைக்கான சதி திட்டத்தை இந்த வீட்டில் இருந்து தான் தீட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்து விட்டு எப்படி தப்பி செல்ல வேண்டும்.

எங்கு தலைமறைவாக இருக்க வேண்டும் என்பது வரை இவர்கள் ஏற்கனவே முடிவு செய்து அதன் பின்னரே கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை செய்து இருந்தது.



கேரள தீவிரவாத தடுப்பு படையிடம் சிக்கியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் சதி வேலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் மர்ம பேக்கில் என்ன வைத்து இருந்தனர்.

அது வெடிகுண்டாக இருக்கலாமா? அந்த பேக் எங்கு சென்றது என்பதில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது. குமரி போலீஸ் கொலை ஏன்? கடந்த 7ம்தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த முகமது ஹனிப் கான், இம்ரான்கான், முகமது சையது ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள் இரவு தான், களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ். ஐ.

வில்சனை, அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் சுட்டுக் கொன்றனர்.
தங்களது கூட்டாளிகளை காவல்துறை கைது செய்ததால், தமிழக போலீசாரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வில்சனை சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது.

கொலை நடந்து இரு நாட்களுக்கு பின் டெல்லியில், தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக காஜா மைதீன் (52), அப்துல் சமது (28), சையது அலி நவாஸ் (32) ஆகியோரை கைது செய்தனர்.

இதில் சையது அலி நவாஸ், நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரும், அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோரின் கூட்டாளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இவர்கள் பரோலில் வருவதற்கு குமரி மாவட்ட போலீசார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் ஜாமீனில் வந்து தலைமறைவானவர்கள் இப்போது தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று கூறப்படுகிறது. நெய்யாற்றின்கரை பகுதியில் இவர்கள் சுற்றி திரிந்தது தெரிய வந்ததை தொடர்ந்து நேற்று மாலை முதல் நெய்யாற்றின்கரை மற்றும் குமரி - கேரள எல்லை பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தொடர்ந்து தீவிர சோதனை நடந்து வருகிறது.

.

மூலக்கதை